புதிய படத்திற்காக சிலம்பம் கற்கும் கார்த்தி
நடிகர் கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை இயக்கியிருந்தார். ஆனால், ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. மேலும், வசூலிலும் தோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்த படத்தில் இழந்த வெற்றியை தனது அடுத்தடுத்த படங்களில் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி தனது 26 வது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். ஒரு மசாலா படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்பு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக, அவர் சிலம்பம் கற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, சண்டை பயிற்சியாளர் பாண்டியன் மாஸ்டரிடம் முறைப்படி சிலம்பம் கற்று வருகிறாராம் கார்த்தி. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.