ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. இதில் 6 பேர் உயிருடன் எரிந்துள்ளனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பாபட்லா மாவட்டம் சீனகஞ்சத்தில் இருந்து அரவிந்தா டிராவல்ஸ் பேருந்து, 40 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்து பர்ச்சூர், சிலக்கலுரிப்பேட்டை வழியாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சென்று கொண்டிருந்தது.
இதில் பல்நாடு மாவட்டம் சிலக்கலுரிப்பேட்டை மண்டலம் சீனகஞ்சம், கோணேசபுடி, நிலையப்பாலம் ஊரை சேர்ந்தவர்களே அதிகம் பயணித்தனர். இவர்கள் அனைவரும் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வாக்களித்துவிட்டு பணி நிமித்தம் காரணமாக அனைவரும் ஐதராபாத் திரும்பினர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பல்நாடு மாவட்டம் சிலக்கலுரிப்பேட்டை மண்டலம், யூரிவாரிபாளையம் சாலை அருகே பேருந்து சென்றபோது, எதிரே ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி பேருந்தின் மீது மோதியது.
இதில் சிறிது நேரத்தில் டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென பேருந்துதின் மீதும் பரவியது. இதனால், இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் மற்றும் நான்கு பயணிகளும் தீயில் உயிருடன் எரிந்தனர்.
இதில் 20 பேர் தீக்காயங்களுடன் தப்பித்தனர். இதில் பஸ் டிரைவர் அஞ்சியுடன் உப்புகுந்துரு காஷியா, உப்புகுந்துரு லட்சுமி மற்றும் முப்பராஜு கியாதி சாய்ஸ்ரி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் உள்ளனர்.
பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்குள் பலர் உயிர் இழந்து விட்டனர். காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக 108-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.