மாணவர்களுக்கு கல்வெட்டுகளை கற்பிக்கும் நிகழ்ச்சி
திருக்கோவிலூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை கற்பிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் கபிலர் தொன்மை ஆய்வு மையமும் இணைந்து கோடைகால கல்வெட்டு கற்பிக்கும் பயிற்சியை நடத்தினர். கீழையூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்று நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள்.
அப்போது கோயிலில் கருவறை சுற்றுச்சுவரில் உள்ள வரிகளை கல்வெட்டு ஆய்வாளர்கள் மாணவர்களுக்கு கற்பித்தனர். ராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வரிகளை நேரடியாக படித்து தெரிந்து கொண்டது பெருமையாக இருப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்தார்கள்.
தமிழர்களின் பண்டைய வரலாறுகளை எடுத்துரைக்கும் கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் வலியுறுத்தினர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பண்டைய வரலாறு குறித்த புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.