ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி – இருவர் கைது
ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.36 கோடி மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் டிரேடிங்கில், கமிஷன் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் 1.36 கோடி ரூபாயை இழந்த ஐ.டி.ஊழியர்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (41) ஐ.டி., ஊழியர். இவர், முகநூலில் டிரேடிங் எப்படி செய்வது என்பது தொடர்பாக வந்த விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 11 ஆம் தேதி, இரு மொபைல் எண்ணில் இருந்து, ஜோஷிதா, வர்ஷினி என்ற பெயர் கொண்ட நபரிடம் இருந்து, அவரது வாட்சப் எண்ணிற்கு ஆன்லைன் டிரேடிங் குறித்து லிங்க் ஒன்று வந்துள்ளது.
கார்த்திக் அந்த லிங்கை திறந்து, டிரேடிங் தொடர்பான விவரங்களை பார்த்த பின், தனது வங்கி கணக்கு வாயிலாக லாகின் செய்ய அனுமதி பெற்று லாகின் செய்துள்ளார்.
தொடர்ந்து, 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, அதிலிருந்து 36,000 கமிஷன் தொகையை திரும்ப எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, 10 சதவீதம் கமிஷன் போக, 300 சதவீதம் லாபம் கிடைக்கும் ‘இன்ட்ரா டே ; பிளாக் டிரேட் மற்றும் ஐ.பி.ஓ., ஆகிய டிரேடிங்கில் இணைய விரும்புவதாக, மர்ம நபர்கள் வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கமிஷன் தொகையான 27 லட்சம் ரூபாயை செலுத்தாவிட்டால், வங்கி கணக்கு முடங்கிவிடும் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அதன்படி, 27.96 லட்சம் ரூபாய், வங்கி கணக்கு மூலம் செலுத்தியுள்ளார்.
மேலும், மர்ம நபர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் 1.36 கோடி ரூபாயை செலுத்தி பணத்தை இழந்துள்ளார்.
இது குறித்து விசாரித்த மத்திய சைபர் கிரைம் போலீசார், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்(30) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்கை பயன்படுத்தி தேவையில்லாமல் பணத்தை இழக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.