நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார். இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் மண்ணாங்கட்டி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிகர் அஜித்துடன் ஐந்தாவது முறையாக ஜோடி சேர இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
அதாவது நடிகர் அஜித், தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கும் நிலையில் தனது 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே நடிகை நயன்தாரா, அஜித்துடன் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிகப்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.