சினிமாவில் மிகப்பெரிய நடிகர் பட்டாளங்களை கையாள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் அதை நேர்த்தியாக செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர் தான் கே.எஸ். ரவிக்குமார். தமிழ் சினிமாவில் பல திறமை வாய்ந்த இயக்குனர்கள் இருந்தாலும் தொடர்ந்து பல கமர்சியல் படங்களை கொடுத்து கமர்சியல் ஜாம்பவானாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவருடைய படங்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் அனைவரும் சென்று பார்த்து ரசிக்கக்கூடிய தரமான திரைப்படங்களாகவே இருக்கும். இவர் ஆரம்பத்தில் புது வசந்தம் எனும் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பலராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து முக்கியமான இயக்குனராக மாறினார். மேலும் ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜுன், விஜய், சூர்யா, அஜித், மாதவன் என பல ஸ்டார் நடிகர்களை இயக்கிய பெருமையும் கே .எஸ். ரவிக்குமாரை சேரும். குறிப்பாக ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து இவர் இயக்கியிருந்த முத்து, படையப்பா, தெனாலி, அவ்வை சண்முகி போன்ற படங்கள் இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாகும். அது மட்டும் இல்லாமல் கமல் நடிப்பில் இவர் இயக்கியிருந்த தசாவதாரம் திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவித்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அந்த வகையில் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களையும் இயக்கி இருக்கிறார். மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார் கே.எஸ். ரவிக்குமார். இவ்வாறு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் கே.எஸ். ரவிக்குமார் தற்போது ஹிட் லிஸ்ட் எனும் படத்தை தயாரித்துள்ளார். இவ்வாறு முழு அர்ப்பணிப்புடன் திரைத்துறையில் பணியாற்றி வரும் கே .எஸ்.ரவிக்குமார் இன்று தனது 66 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.