ஆவடி அருகே வெள்ளானூரில் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் அரசுக்கு சொந்தமான சுமார் 40 செண்ட் நிலம் உள்ளது. அதில் அப்பகுதி இளைஞர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதை சிலர் ஆக்ரமிப்பு செய்வதாக ஆர்.டி.ஓ.விற்கு புகார் கொடுத்துள்ளனர். நேரடி விசாரணைக்கு வந்த ஆர்.டி.ஓ. கற்பகம் முறையாக விசாரணை நடத்தாமல் காலி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை திட்டியதாக தெரிகிறது. அதனால் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்துள்ளனர்.
அப்பொழுது ஆர்.டி.ஓ கற்பகத்திற்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் விவாதமாக மாறியுள்ளது. வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் ஆர்டிஓ ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அதனால் ஆர்டிஓ வாகனத்தை மறித்து அப்பகுதி மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறைப்பிடித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாகரன் வந்து மக்களிடம் சமாதானம் பேசிய பின்னர் ஆர்டிஓ கற்பகத்தை விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.