கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் 1,552 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 11.20 லட்சம் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலமாக வாக்களித்தனர். இதில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 8,485 பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். இதில் வாக்கு எண்ணிக்கையானது வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 3 சுற்றுகளாக நடைபெற்ற தபால் வாக்குகளில் 7385 வாக்குகள் செல்ல தகுந்தவையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முக்கியமாக 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 1,100 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தபால் வாக்குகளுக்கான படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாதது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து தபால் வாக்கு கவர்களை முறையாக ஒட்டாதது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1552 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன’ என்றனர். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, 2,045 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.