திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது நெடும்பிறை கிராமம். இக்கிராமத்தில் ஆழமான குளம் ஒன்று உள்ளது. இங்குள்ள குளத்தில் இளைஞர்கள் குளிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அங்குள்ள குளத்தில் சிறுவர்கள் இன்று குளிப்பதற்காக சென்றுள்ளனர். முதலில் கரையின் அருகே நின்று குளித்துள்ளனர். பின்னர் சற்று தள்ளி நின்று குளித்ததில் ஆழத்தில் சென்ற 3 சிறுவர்களும் குளத்தில் மூழ்கி தத்தளித்துள்ளனர். அக்கம்பக்கத்தில் பொதுமக்கள் இல்லாத காரணத்தினால் 3 சிறுவர்களும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் இறந்த சிறுவர்கள் அதே ஊரைச் சேர்ந்த பரத் (12), சந்தோஷ் (10), சாய் சரண் (8) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கதறிய அழுத சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.