நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்து திருப்திகரமாக இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூச்சுப் பயிற்சி, யோகா உள்ளிட்ட இயற்கை சார்ந்த மருத்துவ சேவைகளை முதியோர்களுக்கு வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்தும், அதற்கான விளக்கமும் திருப்திகரமாக இல்லை. நீட் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிறகு சென்னை கிண்டி கிங் ஆகிய 2 இடங்களில் மட்டுமே இதுவரை தேசிய முதியோர் நல மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 200 படுக்கைகளுடன் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.