நேபால் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியானது 1 வித்தியாசத்தில் போராடி வீழ்த்தியது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்தநிலையில் இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற 31வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நேபால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தென்னாப்பிரிக்கா அணி ஏய்டன் மார்க்ராம் தலைமையிலும் நேபால் அணியானது ரோகித் பவுடேல் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ்சில் உள்ள ஆலன் வாலே மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நேபால் அணியின் கேப்டன் ரோகித் பவுடேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிஷா ஹென்ரிக்ஸ் 43 ரன்களிலும் குயிண்டன் டிகாக் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஏய்டன் மார்க்ராம் 15 ரன்களிலும் ஹென்ரிஸ் கிளாசன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 115 ரன்கள் எடுத்தது.
பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நேபால் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குஷால் பர்டேல் 13 ரன்களிலும் ஆஷீப் சீக் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரோகித் பவுடேல் ரன் ஏதுமின்றியும் அணில் குமார் ஷா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் எடுத்தது இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகள் வீழ்த்திய தர்பிரஸ் சம்ஸி தேர்வு செய்யப்பட்டார்.