2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட சி. அன்புமணி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட படி ஜூன் 14 காலை 10 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இதுவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என நேற்று அறிவித்திருந்தார். கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் போட்டியிடுவார் என அண்ணாமலை நேற்று கூறிய நிலையில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூலை 10ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி. அன்புமணி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கவின்!
ஏற்கனவே திமுக சார்பில் அன்னியூர் சிவாவும் நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.