வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். இந்த அறிவிப்பை கேரள காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
கேரளாவின் வயநாடு தொகுதியிலும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பி. ஆக நீடிக்க முடியும் என்பதால் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் கார்கே அறிவித்தார்.
இதனை அடுத்து பேசிய ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களுடன் தமக்கு உணர்வு பூர்வமான தொடர்பு இருப்பதாக கூறினார். பின்னர் பேசிய பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இல்லாததை மக்கள் உணர விட மாட்டேன் என்றும் கூறினார்.
ராகுல் காந்தி தற்போது ராஜினாமா செய்திருப்பதால் வயநாடு தொகுதி காலி ஆனதாக அறிவிக்கப்பட்டு விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலில் வயநாட்டு தொகுதியில் ராகுலை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா போட்டியிட்டார்.
ராகுலுக்கு எதிராக தோல்வியை தழுவிய ஆனி ராஜா பிரியங்கா வேட்பாளராக அறிவித்ததை பெண் என்ற முறையில் வரவேற்பதாகவும் பிரியங்காவை எதிர்த்து தான் போட்டியிடுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையே முடிவு செய்யும் எனவும் நாடாளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இடம் பெற வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலை என்றும் தெரிவித்துள்ளார்.