கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். இதில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, மாளவிகா மோகனன் போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட 250 கோடி வரை வசூல் செய்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் மீண்டும் நடிகர் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ரஜினி தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தை முடித்துவிட்ட நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு 2024 ஜூலை மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தின் நடிகர் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் ரஜினி தனது அடுத்த படமான தலைவர் 172 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கலாம் என்று புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. பேட்ட படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைய இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
அதே சமயம் கார்த்திக் சுப்பராஜ் தற்போது சூர்யா நடிப்பில் சூர்யா 44 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து ரஜினியை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.