அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ’சூப்பர் 8’ சுற்றில் முதலாவது ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.. இதில் அமெரிக்கா அணி மோனக் பட்டேல் தலைமையிலும் தென்னாப்பிரிக்கா அணியானது ஏய்டன் மார்க்ராம் தலைமையிலும் களம் கண்டன. இந்த ஆட்டமானது வெஸ்ட் இண்டீஸ் உள்ள சர் விவியர் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரிஷா ஹென்ரிக்ஸ் 11 ரன்னில் ஆட்டமிழக்க, மறுபுறம் எதிர்த்து ஆடிய குயிண்டன் டிகாக் அபார ஆடி 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்க்ராம் 46 ரன்களும் டேவிட் மில்லர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்கள் எடுத்தது.
பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டிவன் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் களமிறங்கிய அண்டிரிஸ் காஸ் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்திலிருந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஹர்மீத் சிங் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டநாயகனாக குயிண்டன் டிகாக் தேர்வு செய்யப்பட்டார்.