திருவொற்றியூரில் இளம்பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் தந்தை மகன் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாற்றியூரில் கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ்(51). இவரது மகன் வெங்கலசாய்(30) ஆகிய 2 பேரும், ஆந்திராவில் இருந்து மாடுகளை வாங்கி வந்து, தனது வீட்டில் வைத்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடீஸ்வரராவ் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த மாடுகளை லாரியில் இருந்து இறக்கும்போது தப்பியோடிய எருமை மாடு கிராம தெருவிற்கு வந்துள்ளது. இதில் அங்குள்ள ஆட்டோ, பைக் ஹாரன் சத்தத்தில் மிரண்டுபோன எருமை மாடு, அந்த வழியாக நடந்து சென்ற மதுமதி மற்றும் பொதுமக்களை சரமாரியாக முட்டியதும் தெரியவந்துள்ளது.
இதில் அம்சா தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மதுமதி (33) படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முரட்டுத்தனமாக சுற்றித்திரிந்து, பொதுமக்களை முட்டி தள்ளிய எருமை மாட்டை பிடித்து, வாகனத்தில் ஏற்றி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, மதுமதி கொடுத்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார், 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மாட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் மாடுகளை வாங்கி வந்து பாதுகாப்பு இல்லாமல் வெளியே விட்ட கோடீஸ்வரராவ், என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக தந்தை மகன் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் மதுமதியை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மதுமதியின் மருத்துவ செலவிற்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.