கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். தமிழக ஆளுநருடன் இன்று ராஜ்பவனில் சந்தித்த அண்ணாமலை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் திமுகவினருக்கு இதில் தொடர்பு இருப்பதாக வலியுறுத்திய அவர், அதற்கான ஆதாரங்களையும் அண்ணாமலை ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.