செங்கல்பட்டு அருகே ரப்பர் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் கருநீலம் பகுதியைச் சேர்ந்த பரிமளா-சந்திரன் தம்பதியினருக்கு மனிஷா (வயது 14) என்கிற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மனிஷா அவரது பெற்றோரிடம் ரப்பர் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவருடைய பெற்றோர் நாளை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தாயாருக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே மனிஷா தன் கையில் இருந்த பென்சிலை எடுத்து அவரது தாய் பரிமளா மீது குத்தியுள்ளார். இதில் காயமடைந்த தாயார் பரிமளா அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது மனிஷா அவரது அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த தாயார் பரிமளா ஜன்னல் வழியே பார்த்தபோது மின்விசிறியில் மனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைக் கண்ட தாயார் பரிமளா கதறி அழுதார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவே அவர்கள் உடனடியாக மறைமலைநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.