கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல்நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 19ம்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 114 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 பேர் நேற்று முன்தினம் வரை இரண்டு கட்டங்களாக நலமுடன் வீடு திரும்பினர். 3ம் கட்டமாக நேற்று கள்ளக்குறிச்சியில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அந்தவகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமவனையில் இருந்து 96 பேரும், புதுவை ஜிப்மரில் இருந்து 6 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து 22 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இருந்து 2 பேர், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து 2 பேர், சென்னை ராயப்பேட்டையில் இருந்து ஒருவர் என 129 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
விஷ சாராயத்துக்கு 63 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மாலை புதுச்சேரி ஜிப்மரில் மகேஷ் (41) என்பவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ள சாராயத்துக்கு கிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்ததால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இதனிடையே அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த 4 பேர், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். முழுமையாக குணமடைந்ததால் இரண்டு நாட்களுக்குள் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தனர். அதற்குள் அவர்கள், வெளியில் உள்ள உறவினர்களை பார்த்து வருவதாக கூறி மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தப்பியவர்களுக்கு சாராய வியாபாரிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர்கள் தப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இந்த சூழலில், கள்ளக்குறிச்சி விஷ சாராய பலியை தொடர்ந்து கள்ளச்சாராயம் வியாபாரம் செய்வோர் மற்றும் கடத்துபவர்களை கைது செய்ய எஸ்பி ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்.
இதுவரை சுமார் 86 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரியும் அதிமுக முன்னாள் கிளை செயலாளருமான மணிகண்டனை (42) சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று திடீரென தப்பி ஓடி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 4 பேர் தப்பினர். இதில் ஒருவர் வேறு ஒரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். மற்றவர்களை போலீசார் கண்டுபிடித்து மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் புதுச்சேரி மாதேஷ், சென்னை சிவக்குமார் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, கதிரவன், கண்ணன், சக்திவேல், சிவக்குமார், பன்சிலால், கவுதம் ஆகிய 11 பேரை 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் சில திருத்தங்களை செய்து தாக்கல் செய்ய நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிபிசிஐடி போலீசார் இன்று அல்லது ஜூலை 1ம்தேதி மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடதக்கது.