மக்களவையில் நேற்றைய தினம் ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸை மட்டுமே விமர்சித்தார்; இந்துக்களை அல்ல என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நேற்றைய தினம் ( ஜூலை 1) அவையில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விமர்சித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி , அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் ராகுல் காந்தி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்த ராகுல், “மக்களவையில் சிவன் படத்தை காட்டி, சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. அகிம்சையின் சின்னம். உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர். ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, பிரதமர் மோடியோ அல்ல. உண்மையான இந்துக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். ஆனால் பாஜகவினர் நேரெதிராக வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர்” என்று பேசினார்.
இதற்கு, வன்முறையை மதத்துடன் இணைப்பது தவறு எனவும், இந்த கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார். அத்துடன் அவையில் கூச்சல் குழப்பமும் நிலவியது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த சூழலில், அவரது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி , “ராகுல், இந்துக்களை அவமதிக்கவில்லை. அவர் தனது உரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பாஜக குறித்தும், பாஜக தலைவர்கள் குறித்தும் தான் அவர் பேசி இருந்தார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் அதன் ஊடாக பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை இப்போது நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.