ஏழு கடல் ஏழு மலை படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் குறைவான படங்களாக இருந்தாலும் இவருடைய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இவர் தற்போது நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் கூட்டணியில் இயக்கியுள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இயக்குனர் ராம் இயக்கியுள்ள இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் அதைத் தொடர்ந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் ஏழேழு மலை எனும் இரண்டாவது பாடல் நாளை (ஜூலை 5) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிலும் முதன்முறையாக யுவன் இசையில் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலை பாடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.