20 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு 50 கோடி ரூபாய் சொத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி.1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கி உள்ளார்.5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி நிலத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். கட்டுமான நிறுவனத்துடன் கவுண்டமணி ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.
ஒப்பந்தத்தின்படி, நடிகர் கவுண்டமணி கட்டுமான செலவு மற்றும் ஒப்பந்ததாரர் கட்டணமாக ரூபாய் 3.58 கோடியை தவணையாக செலுத்த வேண்டி இருந்தது. மார்ச் 1996 மற்றும் பிப்ரவரி 1999 க்கு இடையில் 1.04 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருந்தும் கட்டுமானம் அதற்கேற்ப மேற்கொள்ளப்படாததால், 2003 ஆம் ஆண்டில் பில்டரிடமிருந்து கட்டுமான பணியை நிராகரித்துவிட்டதாக கவுண்டமணியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சொத்தில் உள்ள குத்தகைதாரர்களை காலி செய்யவும், வணிக வளாகம் கட்டுவதற்கான கட்டிடத் திட்ட அனுமதி மற்றும் பிற அனுமதிகளைப் பெறவும் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட காலத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் ஒப்புக்கொண்ட ரூபாய் 3.58 கோடியில் ரூபாய் 1.04 கோடியை மட்டுமே நடிகர் கவுண்டமணி செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாததால், பில்டருக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடந்த 26 ஆண்டுகளாக சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் செலவழித்ததால், நடிகர் ரூ.40 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, திட்டத்தை முடித்திருந்தால் மட்டுமே நிறுவனம் வட்டி கோர முடியும் என்றும் இல்லையெனில் வட்டி தொகையை கோர முடியாது என்றும் கூறியுள்ளார். 46.51 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் மதிப்பீடு செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் நிலத்தை அபகரிக்க முயன்ற நிறுவனத்துக்கு எதிராக 2006 -ல் உயர்நீதிமன்றத்தில் நடிகர் கவுண்டமணி சிவில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் கவுண்டமணியிடம் பெற்ற நிலத்தை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2021-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
கவுண்டமணியிடம் பணம் பெற்ற பிறகும் பணியை முடிக்காததால் சொத்தை சட்டபூர்வமாக வைத்திருக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது. இதனை அடுத்து தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.