சௌந்தர்யாவின் மரணத்தில் மோகன் பாபுவிற்கு தொடர்பு இல்லை என சௌந்தர்யாவின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. இதைத் தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். தமிழ் மட்டுமில்லாமல் இவர் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சிறந்த நடிகையாக கொடிகட்டி பறந்தார். மேலும் நடிப்பில் இருக்கும் போதே அரசியலிலும் களமிறங்கினார் சௌந்தர்யா. இந்த சூழலில் தான் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு சௌந்தர்யாவின் மரணம் விபத்து இல்லை, கொலை எனவும், நில பிரச்சினை காரணமாக நடிகர் மோகன் பாபுவிற்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பரபரப்பு புகார் அளித்திருந்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “சௌந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன் பாபுவிற்கு தொடர்பு இல்லை. மோகன் பாபு எங்களது நிலம் எதையும் அபகரிக்கவில்லை. கடந்த 25 வருடங்களாக மோகன் பாபுவின் குடும்பமும் தன்னுடைய குடும்பமும் நட்பாக பழகி வருகிறது. மேலும் இது பொய்யான தகவல். இது போன்ற தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.