அண்ணாநகர் சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த பெண் ஆய்வாளர், அதிமுக வட்டச் செயலாளர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, சதீஷ் என்ற இளைஞர் மீது புகாரளிக்க, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றனர். அப்போது, காவல்துறை இன்ஸ்பெக்டர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, தமிழகத்தி்ல் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இட பெற்றனர்.
இந்த வழக்கில் 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் என இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர் என்பவரும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவருமே குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு, குற்றவாளி சதீஷின் பெயரை நீக்கச் சொல்லி வற்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….