HomeBreaking Newsபகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

-

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம் தொடர்பாக சீனா ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பர தீர்வுக்கு வந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீனா உறுதி செய்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் எல்லை ரோந்துப் பணிகளில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், தற்போதைய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியதாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக சீனாவும் இந்தியாவும் தூதரக மற்றும் ராணுவ வழிகள் மூலம் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இரு தரப்பினரும் தொடர்புடைய விஷயங்களில் ஒரு தீர்வை எட்டியுள்ளனர், அதை சீனா சாதகமாக பார்க்கிறது என்று லின் ஜியான் கூறினார். அடுத்த கட்டமாக, தீர்மானத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த சீனா இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

கிழக்கு லடாக்கில் எல்ஏசியில் எஞ்சியிருக்கும் முட்டுக்கட்டைப் பகுதிகளில் ரோந்துப் பணிக்காக சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இந்தியா நேற்று கூறியது. வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘கடந்த பல வாரங்களாக, இந்திய மற்றும் சீன இராஜதந்திர மற்றும் ராணுவ பேச்சுவார்த்தையாளர்கள் பல தளங்களில் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இந்த விவாதத்தின் விளைவாக, இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் எல்ஏசியில் ரோந்து செல்வது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு வழிவகுக்கும். 2020 ல் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கும். இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறி இருந்தார்.

ரோந்து பகுதி உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில், வீரர்கள் பின்வாங்குவதும், ரோந்துப்பணி மீண்டும் தொடங்குவதும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 2020க்கு முன்பு இருந்ததைப் போலவே இரு நாட்டு ராணுவங்களும் பழைய நிலைக்குத் திரும்பும். நிகழ்ச்சி ஒன்றில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறுகையில், ‘2020ன் நிலையை அடைந்துள்ளோம். 2020ல் ரோந்து சென்ற அதே இடத்தில் ரோந்து செல்வோம்’’ எனத் தெரிவித்தார்.

இந்தியா-சீனா இடையேயான உறவுகள், ஒத்துழைப்பு மற்றும் போட்டிகள் சிக்கலானவை. வரலாற்று எல்லை தகராறுகள், பிராந்திய போட்டி மற்றும் பொருளாதார ஈடுபாடு ஆகியவற்றால் இரு நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. அருணாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் பிராந்திய கருத்து வேறுபாடுகளுடன் இரு நாடுகளும் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. எல்லை பதற்றங்கள் பலமுறை வெடித்துள்ளன. குறிப்பாக 1962 போர் மற்றும் சமீபத்திய 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின.

இந்த பதட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவும் சீனாவும் குறிப்பிடத்தக்க பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன. சீனா- இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும். இருப்பினும் வர்த்தக சமநிலை சீனாவிற்கு பெரிதும் சாதகமாக உள்ளது. இது இந்தியாவில் கவலையை ஏற்படுத்தியது. இரு நாடுகளும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பலதரப்பு மன்றங்களில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்த இந்தியா முயல்கிறது. குவாட் போன்ற முன்முயற்சிகள் மூலம் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆதரவை சீனா பெற்று வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தானுடனான சீனாவின் நெருங்கிய உறவுகள் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது.

MUST READ