திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பெரிதளவில் கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் இவ்விழாவிற்கு இந்த ஆண்டும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
தீபத் திருவிழாவையொட்டி, டிசம்பர்13ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மகா தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி முதல் 3 நாள்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.