தனுஷ் தொடர்ந்த வழக்கில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நயன்தாரா: பியான்ட் தி ஃபேரி டேல் என்ற தலைப்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் திரைப்பயணம் காட்டப்பட்டது. அத்துடன் நானும் ரெளடி தான் படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்கும் – விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த ஆவணப்படத்தில் நடிகை நயன்தாரா, நானும் ரெளடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி பெறாமல் ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாக நடிகர் தனுஷ், நயன்தாராவிற்கு எதிராகவும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் உண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் தரப்பில், நடிகர் தனுஷ் ஆவணப்படம் வெளியான ஒரு வாரத்திற்கு பின்னர் தான் வழக்கு தொடர்ந்தார். எனவே இந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்யவேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.