குட் பேட் அக்லி படத்திலிருந்து OG சம்பவம் பாடல் வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதாவது அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன், ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதேபோல் அஜித்தை விண்டேஜ் லுக்கில் காட்டி இருந்தார். மேலும் ஜி.வி. பிரகாஷின் இசையும் தரமாக அமைந்திருந்தது. அடுத்தது இந்த படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடலான OG சம்பவம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த பாடலின் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன், தான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் அஜித்திற்காக குட் பேட் அக்லி படத்தில் பாடகராக அறிமுகமாகியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து OG சம்பவம் பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். விஷ்ணு எடாவன் எழுதியுள்ள “திரையரங்கம் சிதறட்டும்… இவன் பெயர் முழங்க கலக்கட்டும்…” போன்ற வரிகள் கூஸ்பம்ஸ் தருகிறது. எனவே இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ள நிலையில் இந்த பாடலை ரசிகர்கள் அதிரி புதிரியாக கொண்டாடி வருகின்றனர்.