தவெக தலைவரும் நடிகருமான விஜய் குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் விஜயும், திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு 26-10-24 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார். இது பல விமர்சங்களை பெற்றுள்ளது.
பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சித்து வந்தனர். திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தை, கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என நாம் தமிழர் கட்சி சீமான் கூறினார். இதேபோல் பாஜக, திமுக, விசிகவினரும் விஜயை விமர்சித்தனர். இதில், மற்றவர்களைவிட ஒருபடி மேலே போய் விஜயை விமர்சித்து அறிக்கை விட்டதோடு, திருவண்ணாமலையில் நீண்ட பேட்டியையும் கொடுத்திருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
இந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் பிரபல இதழ் ஒன்றின் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், விஜயும் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகின. இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து திருமாவளவன் தற்போது, ‘‘புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் கலந்து கொள்வது குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். நானும், விஜய்யும் பங்கேற்பது பற்றி ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி தொடரும். இந்தக் கூட்டணியை விட்டுவிட்டு வேறு எந்தக் கூட்டணிக்கும் செல்ல விசிகவுக்கு எந்த தேவையும் இல்லை. புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவதாக கூறப்பட்டிருந்தது. அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, விஜய்யுடன் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்தபோது, விஜய் அந்த விழாவில் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த புத்தகத்தை வெளியிட உள்ளார் எனக் கூறப்படுகிறது.