தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் ரூ.115 கோடிக்கு இனிப்புகள் மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பொதுமக்களிடையே இவ்வகையான சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.