தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் வெடித்து வரும் பட்டாசுகளால் சென்னையில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் நேற்று இரவு முதல் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை நகரின் பல்வேறு பகுதிகள் கடும் புகை மண்டலமாக காணப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் காலை 7 மணி நிலவரப்படி காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது. அடுத்தபடியாக கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில் 142, கோவையில் 104, புதுச்சேரியில் 119 என்ற அளவில் காற்றின் தரக்கூடியீடு மிதமான அளவில் அதிகரித்து வருகிறது.