தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை அவசரகால மேலாண்மை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னேற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசரகால மேலாண்மை மையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னேற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி, தீபாவளி நேரத்தில் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 108 அவசர கால சேவை மையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 12 ஆயிரம் அழைப்புகள் வரும் நிலையில், தீபாவளி நேரம் என்பதால், 20 ஆயிரம் அழைப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்காக, அவசரகால மேலாண்மை மையம் 3 shift-களிலும், கூடுதலாக, 50 பேர் பணி அமர்த்தப்பட்டு, மொத்தம் 194 நபர்கள் அழைப்புகளை ஏற்கும் வகையில் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வழக்கத்தை விட கூடுதலாக தீக்காயங்களும் மற்றும் சாலை விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், அதற்காக ஏற்கனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து நோயாளிகளை எதிர்கொள்ள 75 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டு உள்ளதாகவும் கூறினார்.
3 நாட்களுக்கு தடையின்றி ஆம்புலன்ஸ்களை இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், பாதுகாப்புடனும், பத்திரமாகவும் தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களைக்கேட்டுக் கொள்வதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.