‘லக்கி பாஸ்கர்’ படத்தின் திரைவிமர்சனம்
இன்று (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படம் லக்கி பாஸ்கர். துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ள இப்படத்தை வாத்தி படத்தை இயக்கியிருந்த வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். படத்தின் கதைகளும் 90களில் நடப்பது போல காண்பிக்கப்படுகிறது. நேர்மையான வங்கி ஊழியராக பணிபுரியும் துல்கர் சல்மான் கடன் தொல்லையால் அவதிப்படுகிறார். இதனால் அவருடைய மனைவி மீனாட்சி சௌத்ரி மற்றும் மகன் ரித்விக் ஆகியோருடன் அவமானங்களை சந்திக்கிறார். தன் குடும்பத்தின் பொருளாதாரம் நலனுக்காக துல்கர் சல்மான் ஒரு ரிஸ்க்கான முடிவை எடுக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகள் தான் லக்கி பாஸ்கர் படத்தின் கதை. படத்தின் கதை என்னவாக இருந்தாலும் திரைக்கதை தான் வெற்றியை தீர்மானிக்கும். அந்த வகையில் லக்கி பாஸ்கர் படம், திரைக்கதையில் பின்னிப்பெடல் எடுக்கிறது. படத்தின் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு குறையாமல் இடைவேளை வரை வேற லெவல் கிரைம் திரில்லராக நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகள் மட்டும் நீளமாக தோன்றுகின்றன. அதைத் தவிர படத்தில் வேறு எதையும் பெரிய குறையாக கூற இயலவில்லை. நடிகர் நடிகையர் தேர்வு அந்தந்த கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தி உள்ளது. குறிப்பாக ஒரு தெலுங்கு படம் பார்த்த உணர்வே வராத அளவிற்கு தமிழ் டப்பிங் நன்றாக அமைந்திருந்தது. படத்தில் ஆக்சன் காட்சிகள் ஏதும் இல்லாமல் கூட ஒரு ஹீரோ மாஸ் காட்ட முடியும் என்பதை துல்கர் சல்மான் அவருடைய நடிப்பால் வெளிப்படுத்தி கைத்தட்டல்களை பெறுகிறார். அதேபோல் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். 90களில் இருந்த மும்பையை கண்முன்னே நிறுத்துகிறது ஒளிப்பதிவும் கலை வேலைப்பாடுகளும். ஆபாச காட்சிகள் ஏதும் இல்லாமல் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் சீட் எட்ஜ் கிரைம் திரில்லர் படமாக அமைந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது லக்கி பாஸ்கர்.