தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலும், தமிழகத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் தேதி வரும் 27-ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதையடுத்து வாக்காளர்கள் வருமான இழப்பு ஏதுமின்றி வந்து வாக்களிப்பதற்காக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேகாலயாவில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வாக்காளர்களை கவர்வதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை போட்டிப்போட்டு பரஸ்பரம் அளித்து வருகின்றன. பாஜக சார்பில் மேகாலயாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கட்சியின் தேசிய தலைவரான ஜெபி நட்டா தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதாவது மேகலாயாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலனில் முழு அக்கறை செலுத்தப்படும் என தெரிவித்தார். அதாவது பெண் குழந்தைகள் பிறந்தால் அந்த குடும்பத்திற்கு உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த ஜெபி நட்டா மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். இது அம்மாநில மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றும் ஜெபி நட்டா தேர்தல் அறிக்கையை வாசித்தார்.
இதுமட்டுமின்றி கணவனை இழந்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களுக்கு ஆண்டுதோறும் 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் ஜெபி நட்டா தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என அறிவித்திருந்தது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக பெண்கள் வாக்குகளை கவறும் வகையில் பாஜக தேர்தல் வாக்குறுதியில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.
மேகாலயாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கான்ராட் சங்மா முதல்வர் பதவி வகித்து வருகிறார்.