HomeGeneralதாம்பரம் பல்லாவரம் வழியே செல்லும் அரசுப் பேருந்துகள்

தாம்பரம் பல்லாவரம் வழியே செல்லும் அரசுப் பேருந்துகள்

-

வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு விரைவு பேருந்துகள் இனி மதுரவாயல் வழியே செல்லாமல் தாம்பரம் வழியே செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் பகல் நேரங்களில் சென்னை நகருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் மதுரவாயல், சென்னை புறவழிச்சாலையை பயன்படுத்தி வந்தன. இதன் காரணமாக தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தற்காலிக வெளியூர் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், அரசு விரைவு பேருந்துகளில் வரும் பயணிகள் பெருங்களத்தூரில் இறங்கி மற்றொரு பேருந்து, இரயில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மாநகருக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர்.

தற்போது, சென்னை விமான நிலையம் முதல் கோயம்பேடு வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில் வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் செல்ல அனுமதிக்குமாறு பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை பரிசீலித்த அரசு விரைவு போக்குவரத்து கழகம் பிப்ரவரி 17 முதல் தாம்பரம், ஈக்காட்டுத்தாங்கள் வழியே பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் மாலை 5 மணிக்குமேல் பீக் அவர்ஸ் எனப்படும் போக்குவரத்து நெரிசல் நேரம் என்பதால் புறவழிச்சாலையை பயன்படுத்தி கோயம்பேட்டிற்க்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த புதிய உத்தரவின் மூலம் புறவழிச்சாலையை புறக்கணித்து பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் சுமார் 10 கிலோ மீட்டர் வரை தூரமும் 20 நிமிட நேரமும் மிச்சமாகும் என்பதும் டீசலும் ஓரளவிற்க்கு மீதமாகும் என்பதும் உண்மையே.
இதற்கு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பெருங்களத்தூரிலிருந்து அருகிலிருக்கும் இடங்களுக்குச் செல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலித்து வந்ததாகவும் இனி நகரத்திற்குள்ளேயே பேருந்துகள் செல்வதால் தங்களின் பணம் மற்றும் நேரம் மிச்சமாகும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடைவர் என்பதே நிதர்சனமான உண்மை.
விரைவில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அங்கிருந்து புறப்படும்.

எனவே, இன்னும் சில மாதங்கள் மட்டுமே வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் வரும் என்பது கொஞ்சம் கசப்பான விஷயம் தான். அதே சமயம் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் சிரமம் இன்றி சென்னை மாநகருக்குள் செல்ல கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

MUST READ