இந்திய அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஹர்திக் பாண்ட்யா சற்று நேரம் தாக்குப்பிடித்து 39 ரன்களை சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்தது.
இதனை அடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். எனினும் அந்த அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிறப்பாக விளையாடி தென்ஆப்பிரிக்க அணியை வெற்றி பெறச் செய்தார். தென்ஆப்பிரிக்க அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.