நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி
நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4% அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு மே 7-ம் தேதி நடைபெற்றது. 20,87, 462 மாணவர்கள் பதிவு செய்தனர். 20,38,596 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 11,45, 976 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 1,47, 583 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 1,44,516 மாணவர்கள் தேர்வு எழுதி 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழில் 30, 536 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இதில் அரசு பள்ளி மாணவர்கள் 12,997 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத வகையில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 30.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 27 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 4% அதிகரித்துள்ளது. 2022ல் 14,979 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4,118 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 27%.
அரசு பள்ளிகளில் படித்து 2018ம் ஆண்டு 5 மாணவர்களும், 2019ல் 6 மாணவர்களும், 2020ல் 336 பேர் எம்பிபிஎஸ் படிப்பையும், 99 மாணவர்கள் பி டி எஸ் படிப்பையும் தேர்வு செய்தனர். 2021ல் 436 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பையும், 104 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பையும் தேர்வு செய்தனர். 2022 இல் 461 மாணவர்களை எம்பிபிஎஸ் படிப்பையும் 106 மாணவர்கள் பிடிஎஸ் படிப்பையும் தேர்வு செய்தனர். இந்த ஆண்டு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பை தேர்வு செய்வார்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.