பாஜக – தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின்போது தொழிலதிபர் கவுதம் அதானியும் உடன் இருந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இம்மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகள் ஒரு அணியிலும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)யின் தலைவருமான அஜித் பவார் ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “2019-ம் ஆண்டில் ஆலோசனைக் கூட்டம் எங்கு நடந்தது என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த கூட்டத்தில் பாஜகவின் சார்பில் அமித் ஷாவும், தேவேந்திர ஃபட்னாவிசும் இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத் பவாரும், பிரஃபுல் படேலும் இருந்தனர். அவர்களுடன் தொழிலதிபர் அதானியும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். இவர்களுடன் நானும் இருந்தேன். அந்த காலகட்டத்தில் சரத் பவாருக்கு தெரிந்தே நான் பாஜகவுக்கு ஆதரவு அளித்தேன். பவாருக்கு தெரியாமல் நான் எந்த முடிவையும் எடுத்த்தில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அப்போது நடந்த கூட்டத்துக்கு பிறகும் சரத் பவார் ஏன் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவரிடம் கேட்டதற்கு, “சரத் பவார் மனதை ஒருபோதும் கணிக்க முடியாது. அவரது மனைவி மற்றும் மகள் சுப்ரியாகூட கணிக்க முடியாது. அவர் என்ன முடிவு எடுப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்” என்று அஜித் பவார் கூறியுள்ளார்.
மிக முக்கிய காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமைக்க பேரம் பேசுவதற்காக நடந்த கூட்டத்தில் தொழிலதிபர் கவுதம் அதானியும் பங்கேற்றதாக அஜித் பவார் கூறிய தகவல் மகாராஷ்டிரா மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா சதுர்வேதி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் டிஜிட்டல் தளத்திற்கு அளித்த பேட்டியின்படி, கவுதம் அதானி முடிவெடுக்கும் கூட்டங்களில் அமர்ந்துள்ளார் என்பது தெளிவாகிறது இது சில தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது: அவர் பா.ஜ,க அங்கீகரிக்கப்பட்ட பேரம் பேசுபவரா? கூட்டணியை சரிசெய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? ஒரு தொழிலதிபர் ஏன் மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு இவ்வளவு ஆர்வமாகவும் நெருக்கமாகவும் உழைக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக அஜித் பவார் கூறியிருந்தாலும், அவர் குறிப்பிட்ட சந்திப்பு உண்மையில் 2017-ல் நடந்தது என்று பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.