சீமான் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியபோது திட்டமிட்டு வீரப்பன் மகள் விஜயா அழைத்துவரப்பட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கின் பின்னணி மற்றும் சீமானின் செயல்பாடுகள் தொடர்பாக ஜெகதீச பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர் காணலில் தெரிவித்துள்ளதாவது:- நடிகை விஜயலட்சுமி வாழ்த்துக்கள் படத்தில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் ஒரு இயக்குநருக்கும், நடிகைக்கும் உள்ள தொடர்புதான் இருவருக்கும் இருந்தது. விஜயலட்சுமியின் அக்கா, ஜெயப்பிரதாவின் சகோதரரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களது குடும்பத்தில் பிரச்சினை வந்தது. சேரன் விஜயலட்சுமியை அழைத்துச்சென்று சீமானிடம் இந்த பிரச்சினையை தீர்த்துவைக்குமாறு கூறினார். அதன் பேரில் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவரும், காவல்துறை அதிகாரியுமான சந்திரசேகர் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தினோம். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரச்சினை பெரிதாகியபோது இதை முடித்துவிடலாம் என்று சீமானிடம் சென்று சொல்கிறோம். ஆனால் அவர் இதனை முறையாக கையாளவில்லை. ஒன்று அவராக முடித்து இருக்க வேண்டும். அல்லது வழக்கறிஞர்களை நம்பிவிட்டிருக்க வேண்டும். இவர்களை நம்பாத காரணத்தால் உடலில் உள்ள கட்டி போல தொடர்ந்து வந்து நிற்கிறது. விஜயலட்சுமி ஏற்கனவே ஒரு முறை புகார் அளித்தார்கள். பின்னர் வாபஸ் பெற்றபோது விசாரணை அதிகாரியிடம் கடிதம் பெற்று நீதிமன்றத்தில் சென்று முறையாக செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இரண்டாவது முறை ஒரு வருடத்திற்கு முன்பாக வந்தபோது யார் யாரோ உள்ள வந்து அவர்களிடம் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என வீடியோ எடுத்து வெளியிட்டனர். அதனை காவல்துறை மூலமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ முடித்திருக்க வேண்டும்.
இப்போது இந்த புகாரில் முகாந்திரம் இல்லை, இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுதான் வழக்கை போடுகிறார். அந்த வழக்கில் நீதிமன்றம்தான் 12 வாரங்களில் விசாரித்து தீர்வு சொல்ல வேண்டும் என உத்தரவிட்டது. திமுக அரசு இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை. சீமான் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டார். சம்மன் ஒட்டியபோது ஊழியர் கிழித்துவிட்டார். மீண்டும் அதிகாரிகள் வந்தபோது, வழக்கறிஞரான சீமானின் மனைவி கயல்விழி அவர்களை அழைத்து முறையாக பேசி இருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. காவல்துறையின் செயல்பாடு அத்துமீறுவது போன்றுதான் இருந்தது. இதற்கு பின்னர் கயல்விழியை வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்கள் பாருங்கள் அது ஒரு அபத்தமானது. என் வீட்டில் ஒட்டினீர்கள் நான்தான் கிழித்தேன் என்று சொல்ல வேண்டும். படிப்பதற்காக நான்தான் கிழித்துக்கொண்டு வர சொன்னேன் என்கிறார். படிக்க கிழிப்பதற்கும், கிழித்து எறிவதற்கும் வித்தியாசம் இல்லையா?.
காவல்துறை நடந்துகொண்டது எப்படி அத்துமீறலோ, அதுபோல சீமான் கொடுத்த பேட்டிகளும் அருவருக்கத் தக்கது. தமிழ்தேசிய அரசியலில் பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் பேசும் பேச்சாகவே இல்லை. அது தெருவில் சண்டை நடந்தால் எப்படி பேசிக்கொள்வார்களோ அப்படிதான் பேசினார். நானும் ஒரு மனிதன்தான் என்று சொல்லலாம். ஆனால் நீங்கள் ஒரு தலைவர். நான் என்ன வயதுக்கு வந்து குச்சி கட்டியிருக்கிற பெண்ணை தூக்கிச்சென்று சோளக்காட்டில் கெடுத்துவிட்டேனா? என்று கேட்கிறார். ஒரு தலைவன் பேசுகிற கருத்தா இது?. அதன் பிறகு கல்லூரி மாணவியை தூக்கிக்கொண்டு போய் கெடுத்துவிட்டேனா? என்கிறார். அருகில் பெண்களை வைத்துக்கொண்டு எப்படி இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். பெண்கள் அரசியலுக்கு வருவதே பெரிய கஷ்டம். அதுபோன்று ஊடகத்தில் தலைவரின் அருகில் அமர்வதே பெரிய கஷ்டம். அப்படி வைத்துக்கொண்டு நீங்கள் பேசுகையில் அந்த பெண்களை என்ன என்று நினைப்பார்கள்? அவர்களது குடும்பத்தினர் அவர்களை எப்படி பார்ப்பார்கள்? கல்லூரி மாணவியை வன்புணர்வு செய்தால்தான் தவறா? 30, 40 வயது பெண்களை வன்புணர்வு செய்தால் தவறு இல்லையா? என்ன பேச்சு பேசுகிறீர்கள். ஒரு வருடத்தில் 6 முறை 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாகத் தான் இருக்க முடியும் என்கிறார். இதெல்லாம் அருவருக்கத்தக்க ஆபாசமான பேச்சு அல்லவா?
பாலியல் புகார் வழக்கை நீதிமன்றத்தில் சென்று நீங்கள் வென்று வருவீர்கள் என்றுதான் நினைக்கிறேன். விரும்பிதான் அந்த பெண் என்னிடம் உறவு வைத்துக்கொண்டார் என்று சீமான் சொல்கிறார். அப்போது உடன் இருக்கும் பெண்கள் என்ன நினைப்பார்கள். இது குறித்து செய்தியாளர்களர் கேட்டபோது, இந்த பாலியல் புகாரால் தனக்கு எதிராகவும், தனது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் வைக்கலாமா? எனறு சீமான் கேள்வி எழுப்புகிறார். உங்களை காயப்படுத்துகிறார்கள் என்றால், நடக்காத விஷயத்தை யாரும் பேசவில்லை. நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றி விட்டார் என சொல்கிறார். இதெல்லாம் கட்சி தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்றது. நீங்கள் பொதுவெளிக்கு வந்த பின்னர் விமர்சனங்களுக்கு உட்பட்டவர் தான். ஆனால் நீங்கள் உங்கள் கட்சியில் இருந்து போன என் மீதும், வெற்றிக்குமரன் மீதும், புகழேந்தி மீதும் ஆபாசமான வார்த்தைகளை சொல்கிறீர்களே. போன முறை இதேபோன்று வழக்கு வருகிறது. சீமான் எல்லோரையும் வரச்சொல்லி குரல் பதிவு போடுகிறார். நான் வேண்டாம் என்கிறேன். அப்போது நீ எனக்கு சொல்லாதே என்கிறார். இதன் மூலம் மக்களுக்கு என்ன தெரியப்படுத்துகிறோம்? ஆள் பலம், அதிகார பலம் அல்லது அதிகாரத்துடன் நெருக்கம் இருக்கிறபோது, யார் வேண்டுமானாலும் தவறு செய்துவிட்டு இதுபோன்று வரலாமா என்று ஒரு எண்ணத்தை ஏற்படுத்தலாமா?.
அந்த வீடியோவில் பாருங்கள். இவ்வளவு கொள்ளையில உனக்கு பழக வேறு பெண்களே கிடைக்கலையா? என என் மனைவி கேட்டார் என்று சீமான் சொல்கிறார். உன்னை அண்ணனாக, சகோதரனாக, சித்தப்பவாக நினைக்கும் பெண்கள் நிற்கும்போது. அப்போது கட்சிக்கு வரும் பெண்கள் என்ன நினைப்பார்கள். அந்த நிகழ்வில் இருந்த பெண்களின் முகத்தை பாருங்கள். எந்த சந்தர்ப்பத்தில் எந்த வார்த்தைகளை சொல்கிறீர்கள் என்பது ஒன்று உள்ளதல்லவா? விஜயலட்சுமியை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழ் இனத்துடைய பெண்களையே அவமானப்படுத்துகிறீர்கள்.
நேற்றைய நிகழ்வில் வீரப்பன் மகள் விஜயா செய்தது பெரிய நாடகம் ஆகும். கிருஷ்ணகிரியில் இருக்கும் விஜயா, தருமபுரிக்கு வருகிறார். அவரை திட்டமிட்டு விமானத்தில் அழைத்து வருகிறார்கள். அவர்கள் வருவதற்கான அவசியமே இல்லை. விஜயா 2024 தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு வந்தார். எதற்காக வந்தார் என்றால் அவர் சிறிய அளவில் பள்ளி நடத்தும் நிலையில், அதில் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையை தீர்த்துக்கொடுக்குமாறு நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளரிடம் சொல்கிறார். அதன் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்ட உடன் நாதகவிற்கு வருகிறார். அவர்கள் கொள்கை ரீதியாக நாதகவிற்கு வரவில்லை. வீரப்பன் மகள் என்கிற நிலையில், அவரது கொள்கைகளை உள்வாங்கி இருக்கிறாரா?. காட்டில் இத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் பெண்களை தொட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறார். அவருடைய பெண் வந்து எங்கப்பாவை முடித்துவிட்டீர்கள் எங்க சித்தப்பாவை என சொல்கிறார்.
சித்தப்பாவை எப்போது உங்களுக்கு தெரியும்?. பாஜகவில் இருந்துவிட்டு இப்போது தானே நாதகவிற்கு வந்துள்ளீர்கள். வந்து ஒரு நாடகத்தை போடுகிறீர்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண் கருப்பு உடைகளை அணிந்துகொண்டு கத்துகிறார். இதெல்லாம் எதற்காக? நீங்கள் ஒரு அஞ்சா நெஞ்சர். சுமூகமாக வந்துவிட்டு போக வேண்டாமா? உங்கள் இருவரது தனிப்பட்ட விவகாரத்திற்காக இனவிடுதலைக்காக வந்தவர்களை காவல் நிலையத்திற்க கூட்டிச்செல்கிறீர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.