முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் எடப்பாடிக்கு எதிராக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஆதரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் என்றும் அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதன் பின்னணி அரசியல் குறித்து ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஸ்டாலின் மிகவும் தெளிவாக அரசியலை நடத்துகிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக வெர்சஸ் அதர்ஸ் என்ற நிலைதான் உள்ளது. இதில் பிரதான எதிரி அதிமுக என்பதால் அதனை மையமாக வைத்து தான் ஸ்டாலினின் நகர்வுகள் இருக்கும். அதனால் மோடியுடன் கூட்டணியில் உள்ளவர்கள் எடப்பாடி என்று சொல்லி, அவருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் வராமல் தடுப்பார். எடப்பாடியின் அரசியல் நகர்வு என்ன என்பது சசிகலா செங்கோட்டையனை தேர்வு செய்யாமல் எடப்பாடியை தேர்வு செய்தார். அதற்கு பிறகு எடப்பாடி சசிகலாவிடம் எவ்வாறு நடந்துகொண்டார் என்பது தெரியும். அதனால் சசிகலா சார்ந்த முக்குலத்தோர் மக்கள், அவர் துரோகம் செய்ததாகவே நினைப்பார்கள். பின்னர் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சருக்கு உத்தரவிடும் நிலையில் இருந்தார்.
பின்னர் அவரை தூக்கி எறிந்து விட்டனர். அதன் பின்னர் ஒபிஎஎஸ், எடப்பாடிக்கு வாளும், கேடயமுமாக இருந்தார். இரட்டை தலைமையின் கீழ் 33 சதவீத வாக்குகளை பெற்றனர். அவரை நீக்கிய பின்னர் ஓபிஎஸ் உடன் சசிகலா, தினகரன் சேர்ந்து கொண்டனர். இதனால் மதுரையில் 3வது இடத்திற்கு சென்றார்கள். ராமநாதபுரம், தேனி, நெல்லை போன்ற இடங்களில் டெபாசிட்டை இழந்தனர். இவ்வாறு முக்குலத்தோர் பெல்ட்டில் அதிமுக கீழே சென்றுவிட்டது. ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்றால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் கணிசமான அளவு திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குகளை விட 2 மடங்கு முக்குலத்தோருக்கு பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறார்.

தற்போது ஸ்டாலின் என்ன நினைக்கிறார் என்றால் முக்குலத்தோர் மக்கள் தனக்கு வாக்களிப்பார்களா? அல்லது முக்குலத்தோருக்கு வாக்களிப்பார்களா? என்று பார்த்தால் தனக்கே வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறார். தற்போது மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கிறார்கள் என்றால் அவர் அந்த பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் உசிலம்பட்டி, கமுதி, மேலநீதிநல்லூர் போன்ற இடங்களில் கல்வி நிறுவனங்களை நிறுவினார். ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் போர்க்குரல் கொடுத்திருக்கிறார். உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதிகளை சேர்ந்த பிரமலை கள்ளர் மக்களால் போற்றப்படும் நபராக மூக்கையா தேவர் இருந்து வருகிறார். அவருக்கு மரியாதை செய்யும்பட்சத்தில் அந்த சமுதாய மக்கள் ஸ்டாலினுக்கு செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறார். அந்த வகையில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைப்பதாக அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.
தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம் அந்த பகுதி மக்களின் வாக்குகள் சசிகலா, தினகரன், ஒபிஎஸ்-ஐ மையப்படுத்தி இருக்கிறது என்று சொல்வதை விட, அது எடப்பாடிக்கு எதிராக உள்ளது. அந்த சமுதாயத்தில் இருந்து உயர் பதவிக்கு வந்தவர்கள் அவர்கள். சசிகலா ஜெயலலிதாவின் தோழியாக இருந்தவர். ஓபிஎஸ் முக்குலத்தோர் சமுதாயத்தில் இருந்து முதலமைச்சராக வந்தவர். 40 சதவீதம் வாக்குகளுடன் ஸ்டாலினுக்கு போட்டியாக இருந்தவர். தினகரன், ஒரு கட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்தியவர். இந்த மூவரும் எடப்பாடி பழனிசாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறபோது, டம்மியான முக்குலத்தோர் தலைவர்களை வைத்து அதனை சரி செய்துவிட முடியாது. அவர்களை விட அவர்களை அடித்த எடப்பாடி மீதான எதிர்ப்பு அதிகம் உள்ளது. அரசியல் ரீதியாக விழிப்புணர்வு மிக்கவர்கள் முக்குலத்தோர் சமுதாயத்தினர்.
ஒன்றிணைந்த அதிமுகவாக மாற்ற பாஜக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிணைந்த அதிமுக வந்தால் எல்லோரும் வாக்களிப்பார்கள் தான். ஆனால் ஒரு கட்சியை கைப்பற்றியவர்கள், தனக்கு மேலே இருந்தவர்களை ஒருபோதும் மீண்டும் கட்சிக்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அதிமுக மீண்டும் தோற்றால், ஓபிஎஸ், தினகரனை தலைவராக்க வேண்டும் என குரல்கள் எழும்பும். இதனால் எடப்பாடி அவர்களை கட்சிக்குள் சேர்க்க மாட்டார். எடப்பாடி தரப்பை விட முக்குலத்தோர் சமுதாயம் அரசியல் விழிப்புணர்வு மிகுந்த சமுதாயமாகும். மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கும் மு.க.ஸ்டாலின் கணக்கு என்பது புத்திசாலித்தமான நடவடிக்கையாகும். அவர் எந்த தவறும் செய்யாமல் தெளிவாக போய் கொண்டிருக்கிறார். அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் தவறு செய்யும் அரசியல்வாதி அல்ல. தோல்வி அடைந்திருக்கிறாரே தவிர அவரும் நேர்த்தியாக விஷயங்களை பார்த்து செய்யக்கூடிய அரசியல்வாதிதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.