Homeசெய்திகள்கட்டுரை10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?... பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!

10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!

-

- Advertisement -

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- வன்னியர்களுக்கு எதிராக திமுக நிச்சயமாக இல்லை. திமுகவுக்கு வன்னியர்கள் வாக்களிக்காமல் உள்ளனரா? அல்லது திமுகவின் முக்கிய பொறுப்புகளில் வன்னியர்கள் இல்லாமல் இருக்கின்றனரா?. ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் திமுக ஆதரவாக இருக்க வேண்டும் என அய்யா ராமதாஸ் எதிர்பார்த்தார் என்றால் அது தவறு. ஒரு அரசியல் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கட்சி, அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற வேண்டும் என்று தான் எண்ணும். அப்படிபட்ட எண்ணத்தில்தான் திமுக உள்ளது என்றுதான் நான் எண்ணுகிறேன். 10.5 சதவீதம் என்று பாமக கேட்பது தமிழக மொத்த மக்கள் தொகையில் 10.5 சதவீதமா?. அவ்வாறு  இருப்பின் அவர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது. ஏனெனில் மக்கள் தொகை 100 சதவீதமாக இருக்கும்போதும் இடஒதுக்கீடு 69 சதவீதம்தான் உள்ளது. இதனால் வன்னியர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு என்பது வழங்க முடியாது.

இன்றைக்கு மருத்துவர் ராமதாஸ், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சமுதாய விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்றைக்கு என்ன நிலையில் இடஒதுக்கீடு உள்ளதோ அதில் 10.5 சதவீத இடஒதுக்கீடு தர முடியாது. மேலும் உள்இடஒதுக்கீடு என்பது வன்னியர்களுக்கோ, முக்குலத்தோருக்கோ கொடுக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தற்போதுள்ள இடஒதுக்கீட்டில் எந்த சாதி பயனடைய முடியாமல் உள்ளனரோ அவர்களுக்குதான் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. எம்.பி.சி பிரிவில் 100-க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இதில் இடஒதுக்கீட்டால் மிக குறைந்த அளவில் பயன் அடைந்தவர்கள் யார் யார் உள்ளனர் என்று பார்க்க வேண்டும். பட்டியல் இனத்தவரில் அருந்ததியினர் சமூகத்தினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கினார். அந்த அடிப்படையில் எம்.பி.சி பிரிவில், மிகவும் பின்தங்கிய பிரிவினருக்குத்தான் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கோ, முக்குலத்தோருக்கோ உள்இடஒதுக்கீடு வழங்க கூடாது.

உயர்நீதிமனறம், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று பாமக கருதினால், அந்த துறையில் மட்டும் உள்ஒதுக்கீடு வழங்கிட கோரிக்கை விடுக்கலாம். எம்.பி.சி பிரிவில் விகிதாச்சர அடிப்படையில் மற்ற சமூகங்களை விட வன்னியர்களும், முக்குலத்தோரும் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக எல்லாவற்றிலும் உள்இடஒதுக்கீடு கேட்பது நியாயம் இல்லை. மேலும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. அதனால் இதனை ஒரு காரணமாக கூறிக்கொண்டு உள்இடஒதுக்கீடு கேட்பது நியாயம் இல்லை. ஆயிரம் நாட்கள் ஆகிவிட்டது இன்னும் நீதி கிடைக்கவில்லை என ராமதாஸ் அய்யா சொல்கிறார். ஏன் ஆயிரம் நாட்கள் காத்திருக்கின்றனர் என்றால் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள். இது போலியான அரசியல் ஸ்டண்ட் ஆகும்.

ramadoss

சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசு நடத்த வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. அதுபோல பீகார் அரசு எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்துவிட்டனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இன்றி, சமூக, பொருளாதார நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளிவந்துவிடும். ஆதலால் மக்கள் தொகை கணக்கெடுப்புதான் அதிகாரப்பூர்வமானது. இதனை தான் தமிழக அரசும் வலியுறுத்துகிறது. ஏற்கனவே பீகார் அரசு எடுத்த கணக்கெடுப்பு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கூட்டணியில் உள்ள நீங்கள் ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தவில்லை என கேட்கிறார். இது அரசியல் ரீதியாக ஆதாயம் தேடுவதற்கான உள்இடஒதுக்கீடு விவகாரத்தை கிழப்புகின்றனர். வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. எஸ்.சி பிரிவில் பள்ளர்களும், பறையர்களும் பயன் அடைந்தனர். அதனால் பாதிக்கப்பட்ட அருந்ததியினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பி.சி. பிரிவில் வண்ணார், நாவிதர், குழாளர், குயவர் என பல சமூகத்தினர் உள்ளனர். ராமதாஸ் அய்யா அன்று போராடியபோது வன்னிய சமூகத்தினருக்காக மட்டும் போராட வில்லை. இன்று அவர் வன்னியருக்கு மட்டும் போரிட்டால் அது துரதிர்ஷ்டவசமானது. எல்லோருக்குமான தலைவராக இருந்த ராமதாஸ் அய்யா தன்னுடைய எல்லைகளை சுருக்கிக்கொள்ளக் கூடாது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதால், தேவர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என திமுக அஞ்சுவதாக பாமக குற்றம் சுமத்துகிறது. ஆனால் அவர்கள் கேட்பதில் என்ன நியாயம் உள்ளது. இதுதான் அடிப்படை பிரச்சினை. நீங்கள் போராட்டம் நடத்தியவர்கள் என்பதற்காக உங்கள் சமூகத்திற்கும் மட்டும் தனியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது. எம்.பி.சி பிரிவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டியது அரசின் கடமை.

இடஒதுக்கீடு போராட்டம் என்பது பாமகவின் அரசியல் நாடகம் - ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்

வன்னியர்களுக்கு 15 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்குவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக இருந்து பல்வேறு நல்ல விஷயங்களை செய்த அன்புமணி ராமதாஸ், தன்னை குறுக்கிக்கொள்ளக்கூடாது. வன்னியர் பெல்ட், தேவர் பெல்ட் என்று கூறுகிறீர்களே அங்கெல்லாம் வன்னியர்களும், தேவர்களும் தான் உள்ளனரா? மற்ற சமூகத்தினர் இல்லையா?. நீங்கள் மீண்டும் மீண்டும் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு கேட்டால் மற்றவர்களை உங்களைவிட்டு பிரிந்து செல்ல மாட்டார்களா?. அரசியல் ரீதியாக என்ன புத்திசாலித்தனமாக நடவடிக்கையாக இருக்க முடியாது.  எம்.பி.சி பிரிவில் 116 சாதிகளில் ஒரு குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, எஞ்சியதை 115 சாதிகளுக்கு பிரித்து கொடுப்பீர்களா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மீண்டும் மீண்டும் எண்ணிக்கை அடிப்படையில் வன்னியர்கள் அதிகம் உள்ளனர், அதனால் அதிக இடஒதுக்கீடு வேண்டும் என கேட்டால் அது சமநீதியை வலியுறுத்துவதாக இல்லையே. அரசியலில் பெரிய சக்தியாக உருவெடுத்த ராமதாஸ் அய்யா, சமநீதிக்காக பாடுபட்ட அவர், இன்று வன்னியர்களிடம் மத்தியில் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள விரும்புகிறார். ஏனெனில் மற்ற சமூகத்தினரிடம் அவருக்கு செல்வாக்கு இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் பாமக, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையிலும் பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.  ஆனால் பாமக இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. கேட்டால் நாங்கள் அமைத்துள்ளது தேர்தல் கூட்டணிதான், கொள்கை கூட்டணி இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். அன்புமணி வாக்களிக்காவிட்டால் விவசாயிகள் சட்டம் நிறைவேறியே இருக்காது. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் வன்னியர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில்  10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது சாத்தியம் அற்றது. ஏனெனில் எம்.பி.சி பிரிவில் இடம்பெற்றுள்ள வண்ணார், நாவிதர், ஒட்டர் போன்றோர் மிகவும் குறைவான அளவே இருப்பர். சாதி வாரி கணக்கெடுப்புக்கு பின்னர் என்ன நடக்க வேண்டும் என்றால் எம்.பி.சி பிரிவில் வாய்ப்புகள் மிக மிக குறைவாக பெற்ற 15 பிரிவுகளை சேர்த்து ஒரு குறிப்பிட்ட சதவீத உள்இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதில் அவர்கள் சுழற்சி முறையில் வருவதுபோல செய்ய வேண்டும்.

எம்.பி.சி பிரிவுக்கான பொது இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு என்ன குறைவான இடங்களா கிடைத்துள்ளது. வன்னியர் சமூகத்திற்கு ஒரு நீதிபதி கிடைக்கவில்லை என்பது தான் சரியான காரணம?. வன்னியர் சமூகத்தில் பலர் ஆட்சியர்களாக இருந்துள்ளனர். கீழ் நீதிமன்றங்களில் பலர் நீதிபதிகளாக இருந்துள்ளனர். பானுமதி அம்மா தனது திறமையால் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகினார். அதனால் பாமக முன்வைக்கும் வாதம் ஏற்புடைதல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடததும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பாமகவின் தேர்தல் நேரத்து அரசியல். இது நிச்சயம் பலன் அளிக்காது. பாமகவின் அரசியலை எதிர்த்து திமுகவும் கேள்வி எழுப்ப தொடங்கவிட்டனர், இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

MUST READ