பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமர் பதவியில் இருந்தாலும், அவரால் அந்த சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும், உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமே உள்ளதாகவும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய ஆளூர் ஷாநவாஸ், திரிணாமுல் எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சக செயலாளர்களில் எத்தனை பேர் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு அளித்த பதிலில் 90 சதவிகிதம் பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது. இ.டபிள்யு.எஸ்-ஐ செயல்படுத்துவது, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றலாம் என பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தோழர் சேகுவேரா என்ற திரைப்படம் சென்சார் போர்டு தணிக்கைக்கு அனுப்பியபோது 3 விழுக்காடு தரப்பினர், மற்ற 97 விழுக்காடு மக்களை எப்படி நடத்துகிறார்கள் என போட்டு உடைத்திருந்தது. ஆனால் தணிக்கை முடிந்து வெளியானபோது பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு இடையிலான பிரச்சினையை பேசுவதாக படம் வந்தது. இதுபோன்ற படங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிப்பதில்லை, அதுபோன்ற படங்கள் அதிகளவில் வர ஊக்குவிக்கின்றனர். சாதிப் பெருமை பேசும் படங்களை அதிகார வர்க்கம் ரசிக்கிறது. தங்களுக்கு கீழ் உள்ளவர்களை எதிரிகளாக கட்டமைக்கிறது. குருமூர்த்தி ஒவ்வொரு சாதி சங்கங்களாக தேடி போய் நிற்கிறார் என்றால், அவருக்கு அந்த சங்கங்கள் மேல் அக்கறையா? காரணம், ரங்கராஜ் பாண்டே, சுமந்த் சி.ராமன் போன்றோர் இந்த மேடைகளுக்கு வருவார்களா?. கருத்துருவாக்கத் தளத்தில் உட்கார்ந்து கொண்டு அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசக்கூடிய ஒருவர் கூட இதுபோனற உரிமை மேடைகளுக்கு வந்ததுண்டா?, ஒருபோதும் வர மாட்டார்கள். அவர்களது எல்லை எது எனபதில் தெளிவாக உள்ளனர். பெரும்பான்மை இந்து மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் ஒருபோதும் வர மாட்டார்கள்.
பிரதமர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் எனறு பாஜக சொல்கிறது. உங்கள் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் பிரதமர் ஆக முடியுமா?, சிறுபான்மை சமுதாயத்தை சேரந்தவர் குடியரசுத் தலைவர் ஆக முடியுமா?, அருந்ததியர் ஒன்றிய அமைச்சராக முடியுமா? என பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால் அம்பேதகர், பெரியார் போன்ற மகத்தான தலைவர்கள், தங்களது இறுதி மூச்சு அடங்கும் வரை போராடியது, எழுதியது, சிறைக் கொடுமைகளை அனுபவித்தது எல்லாம் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரில் 4 பேரை பிடித்து உச்ச பதவில அமர்த்த அல்ல. அந்த சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதே அவர்களது போராட்டம். அவர்களது இலக்கு அதுதான் என்றால் அவர்களே பதவியிலேயே தொடர்ந்திருக்கலாம். காங்கிரசிலேயே பெரியார் தொடர்ந்திருந்தால் உச்ச பொறுப்பு அவரை தேடிவந்திருக்கும். இதற்காக தான் அம்பேத்கர் ஆட்சியை விட்டு வெளியேறினார். தனி மனிதர்களை உச்சப்பொறுப்பில் அமர்த்துவது தான், அந்த சமுதாயத்திற்கு நன்மை என்றால் அவர்களே வெளி வந்திருக்க மாட்டார்கள். மோடி, எல்.முருகனை போன்றவர்கள் அல்லாமல் சமூக பொறுப்பு உள்ளவர்கள் அவர்கள். தனி மனிதர்களை விட சமூகங்களுக்கு அதிகாரம் கிடைப்பது தான் முக்கியம் என பதவியை துறந்துவிட்டு வாழ்நாள் முழுவதும் பயணித்தனர்.
பாஜக சொல்வது எவ்வளவு பெரிய மோசடி என தெரியமா. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மோடி ஆட்சியில் இருக்கும்போது தான் அந்த சமுதாயத்துக்காக பல்வேறு கோரிக்கைகள் இருக்கு. அதற்காக ரோட்டில போராடவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், நாடாளுமன்றத்தில பேசவும் வேணடியுள்ளது. இந்த கோரிக்கைகளை மோடி ஓரு ஆணையால் செய்ய முடியாதா?, மோடி நினைத்தால் செய்யலாம். ஆனால் அதிகாரம் அவரிடம் அடையாளமாக இருக்கிறது, உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் உள்ளது. அவர்கள் தஙகளது நலனிற்கு அதனை பயன்படுத்துவார்கள். மோடி அதற்கு துணை புரிவார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரே பிரதமராக இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நாம் தான் போராட வேண்டும். அவர்கள் எதற்காகவும் போராட வர மாட்டாரகள், இல்லை போராடி தான் பார்த்துள்ளீர்களா, இவ்வாறு அவர் தெரிவித்தார்.