Homeசெய்திகள்கட்டுரை2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது; வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்

2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது; வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்

-

என்.கே.மூர்த்தி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை வகுத்து, செயல்பட ஆரம்பித்துள்ளது.

தேர்தலின் போது ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி கூட்டணி அமைக்க முன் வருவதற்கு முக்கிய காரணங்கள்: 1 கொள்கை 2 தொகுதிகள் எண்ணிக்கை அடிப்படையில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அந்த தொகுதிகளுக்கான செலவை பெரிய கட்சி ஏற்க முன் வரவேண்டும். இதுதான் கூட்டணி அமைவதற்கு இதுவரை காரணமாக இருந்து வந்தது.

2026 தேர்தலில் கூட்டணி அமைவதற்கு “ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்” என்கிற புதிய கொள்கையின் அடிப்படையில் கூட்டணி அமையப் போகிறது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், நம்மோடு கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்றார். அதுவே பெரும் விவாதமாக மாறியது. இந்த கோட்பாட்டை முதன்முதலில் தமிழகத்தில் எழுப்பியவர் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

தவெக மாநாட்டிற்கு பின்னர் அரசியல் விவாதம் திசை திரும்பத் தொடங்கியுள்ளது. தவெக தலைவரும் நடிகருமான விஜய், 2026 தேர்தலில் தனித்து போட்டியில்லை, கூட்டணி அமைத்து தான் போட்டி என்று மறைமுகமாக சொல்லிவிட்டார். கூட்டணி அமைக்க மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறாரா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கப் போகிறாரா? அப்படி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தான் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தை பகிர்ந்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எடப்பாடி பழனிச்சாமி வழங்க தயாராக இருக்கிறார். அந்த மையப் புள்ளியில் ஒரு புதிய கூட்டணி அமையவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாண் கூட்டணி சேர்ந்தார். அந்த கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. சந்திரபாபு நாயுடு முதலமைச்சரானார்.துணை முதலமைச்சர் பதவியை பவன் கல்யாணுக்கு வழங்கினார். அதுபோன்ற ஒரு கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, அந்த கூட்டணியில் நீடிக்குமா? விலகுமா? என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் திமுக கூட்டணிக்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற இரண்டு அணிகள் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆதவ் அர்ஜூன். அவருடைய பேட்டிகள், செயல்பாடுகள் முழுவதும் திமுக கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறது. திருமாவளவனின் ஒப்புதலோடு ஆதவ் அர்ஜூன் செயல்படுகிறாரோ என்கிற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது.

ஆனால் திருமாவளவன், திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம், 2026 தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடருவோம் என்று உறுதியுடன் கூறுகிறார். நாங்கள் கொள்கை அடிப்படையில் பாஜக, பாமகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம், அந்த இரண்டு கட்சிகளும் இடம்பெறும் கூட்டணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது. இது எங்களின் கொள்கை முடிவு என்று திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். ஆனால் அதிமுகவுடனும் அவர்கள் தலைமையில் அமைகின்ற கூட்டணியிலும் ஒரு போதும் விசிக சேராது என்று திருமாவளவன் தெளிவு படுத்தவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு ” கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மனிதனுக்கும் அதிகாரம் என்பது எங்களின் கொள்கை. அதை முதலில் எழுப்பியது நாங்கள். அந்த கோட்பாட்டை நோக்கித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கிறது. அதை வழங்க அதிமுக தலைமையிலான கூட்டணி தற்போது முன் வந்திருக்கிறது. அதனால் திமுக கூட்டணியில் இருந்து மன வறுத்தத்துடன் விசிக விலகி செல்கிறது. எங்களுக்கு வேறு வழியில்லை என்று திருமாவளவன் தேர்தல் நெருக்கத்தில் பேட்டி கொடுத்துவிட்டு திமுக கூட்டணியில் இருந்து விலகி செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் பேச்சுக்கும், அவருடைய கட்சி நிர்வாகிகள் பேசும் பேச்சுகளுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருப்பதை அரசியல் பயின்றவர்களுக்கு தெரியும். அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் உணர்ந்து இருக்கிறார். அதேபோன்று அதிமுக முன்னெடுத்து வரும் கூட்டணி முயற்சிகளையும், அதிமுக, தவெக மற்றும் சில கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்தால் அதன் வெற்றி வாய்ப்புக்கள் எப்படி இருக்கும் என்பதையும் உளவுத்துறை மூலமாக கேட்டு தெரிந்து வைத்திருக்கிறார்.

கலைஞர் கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின் என்று பாஜக தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா சொல்லி இருப்பதை போன்று அரசியல் களத்தில் எதிரிகளுக்கு அவர் ஆபத்தானவராகவே இருந்து வருகிறார். கலைஞர் மறைவிற்கு பின்னர் திமுக தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டதில் இருந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகின்றார். அரசியல் களத்தில் கலைஞரை விட, ஜெயலலிதாவை விட வெற்றி பெறுவது எப்படி என்கிற நுட்பத்தை மு.க.ஸ்டாலின் அறிந்து வைத்திருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சராக அவர் அறிவித்த அனைத்து திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் முடிப்பதற்கு அதிகாரிகளை முடுக்கி விடுகிறார். துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என்று எல்லோரையும் கடுமையாக உழைக்க வைக்கிறார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை நேருக்கு நேர் சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். முடிந்தளவிற்கு குறைகளை நிவர்த்தி செய்து தருகிறார்கள். திமுக தலைவராக அவர் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கி வேலைகளை செய்து வருகிறார். பாக் முகவர்கள் கூட்டம், பூத் கமிட்டி கூட்டம் என்று தற்போது மக்களோடு மக்களாக, மக்களிடம் தொடர்பில் இருந்து வரும் கட்சி திமுக மட்டுமே.

2026 தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எப்படி அமைந்தாலும் சரி, மு.க.ஸ்டாலின் என்கிற திமுக தலைவர் மக்களோடு கூட்டணி வைக்க வியூகம் வகுத்து வருகிறார் என்பது அவருடைய உழைப்பில் தெரிகிறது. அது எந்த அளவிற்கு பயன் அளிக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்கு அடுத்து தற்போது உள்ள கூட்டணி உடையாமல் இருப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனை வியூகத்தையும் கையாண்டு வருகிறார்.

 

2026 Assambly election

MUST READ