2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குமா என்கிற சந்தேகம் எழ தொடங்கியுள்ளது. இதனால் இம்முறை திமுக Vs பாஜக என்ற நிலைதான் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்காலம் மட்டுமே உள்ளது. ஆளும் திமுக கூட்டணி முன்பை விட வலுவடைந்து பலமான நிலையில் காணப்படுகிறது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாகவே திமுக தலைமைக் கழகம் அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இக்குழுவினர், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறார்கள். திமுக அரசின் நலத் திட்டங்கள், பாஜக எதிர்ப்பு என மக்கள் மத்தியிலும் வலுவான இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இந்தியா டுடே – சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு, பல்வேறு தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலிமை மிக்க கூட்டணியை கட்டமைக்க வேண்டிய கடமையும், அவசியமும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இருக்கிறது. ஆனால் அந்த கடமையை அதிமுக செய்ததா? என்றால் கேள்விக்குறிதான். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பொறுப்புக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. தனது ஆட்சிக் காலத்தில் பாஜகவிற்காக பல விஷயங்களில் விட்டுக்கொடுத்து சென்றபோதும், கட்சியை திறம்படவே நடத்தி வந்தார். ஆனால் ஆட்சி போனதும் வீழ்ச்சியும் சேர்ந்தே வந்தது. சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தல்களில் தொடர் தோல்வியை தழுவியது அதிமுக. ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோர் வெளியேற்றப்பட்டதால் கட்சியின் வாக்கு சதவீதமும் சரிவை சந்திக்க தொடங்கியது. எனினும் 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து, சோர்வடைந்த அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பார் எடப்பாடி என அனைவரும் எதிர்பார்த்தனர். அதை உறுதிபடுத்தும் விதமாக அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும் என்றும், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் திட்டவட்டமாக எடப்பாடி கூறி வந்தார்.
இந்த நிலையில், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, தமிழகத்தில் திமுகவை எதிர்க்க ஒன்றுபட்ட அதிமுக அவசியம் என்பதை புரிந்து கொண்டது. இதனால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றரை மீண்டும் கையில் எடுத்து கட்சியில் சேர்க்க முயற்சித்துப்பார்த்தது. எதற்கும் எடப்பாடி பழனிசாமி மசியவில்லை. இறுதியில் தனது பிரம்மாஸ்திரங்களில் ஒன்றாகிய இ.டி.-ஐ கையில் எடுத்து எடப்பாடிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனைகளை ஏவியது. வழக்கு வாயிலாக இரட்டை இலையை முடக்க திறம்பட நடவடிக்கை மேற்கொண்ட பாஜக, அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனையும் வலையில் வீழ்த்தி அச்சுறுத்தியது.
பாஜகவின் தொடர் அச்சுறுத்தல்களால் எடப்படியும் வேறு வழியின்றி 2026ல் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முடிவிற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் வெளிப்பாடுதான் எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சூலுரைத்த எடப்பாடி, தற்போது கூட்டணி குறித்து 6 மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்று சொன்னது. ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் அதிமுகவில் சேர்ந்து கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணம் நிறைவேறாத நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துகொண்டு அதிமுக கூட்டணியில் வேட்பாளர்களாக போட்டியிடலாம் என்று தெரிகிறது. இதற்காக பாஜகவுக்கு தமது நன்றிக்கடனை வெளிப்படுத்தும் விதமாக தான் டிடிவி தினகரன், அண்ணா இன்று இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஆதரித்திருப்பார் என்று சொன்னது.
இந்நிலையில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பையும் பாஜகவே ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக ஒரு அங்கமாக இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும். மகாராஷ்டிரா மாநில பாணியில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்காமல் போட்டியிடுவது. தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்றால் பாஜகவை சேர்ந்த மூத்த மத்திய அமைச்சர் ஒருவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். அதிமுக அதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும். இவ்வாறாக கணக்குகள் செல்வதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நிலையை கூட இந்த தேர்தலில் இழந்து பாஜகவின் கூட்டணியில் ஒரு சிறு அங்கமாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது கால ஓட்டத்தின் மிகப் பெரிய அவலமாகும்.