Homeசெய்திகள்கட்டுரைசீமானுடன் 27 ஆண்டுகள்... அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!

சீமானுடன் 27 ஆண்டுகள்… அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!

-

- Advertisement -

ஆர்எஸ்எஸ் அமைப்பு சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துவதாகவும், அதற்கு சீமான் துணை போகிறார் என்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன்  குற்றம்சாட்டியுள்ளார்.

சீமான் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான உறவு குறித்தும், ஈரோடு இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் வாங்காதது குறித்தும் ஜெகதீச பாண்டியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர் நேர்காணலில் கூறி இருப்பதாவது :- பெரியாரை வைத்து அரசியல் செய்வதால், அவரை தகர்க்க வேண்டும் என்று சீமான் சொல்கிறார். நான் கேட்கிறேன் ஏன் அவரை தகர்க்க வேண்டும்?. தமிழ் தேசியத்திற்கு எதிரானவரா பெரியார்?. தமிழ் தேசியத்திற்கு ஆரிய பிராமணம் எதிரியா? பெரியார் எதிரியா? திராவிடம் என்ற கருத்தியல் ஆதி சங்கரர், திருஞான சம்பந்தரரை குறிப்பிட்டு பயன்படுத்தியுள்ளார். திராவிடம் என்ற வார்த்தையை அயோத்தி தாசர், பாவலர் பெருஞ்சித்தரனார் போன்றோரும் பயன்படுத்தி உள்ளனரா? இல்லையா?. இதெல்லாம் 2009 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த முரண்பாடு வருகிறது. யார் தமிழர்? என்பதில் தான் பிரச்சினை வருகிறது. தமிழர் குறித்து பாவாணார், மணியரசன் உள்ளிட்டோர் பல்வேறு வரையறைகளை முன்வைக்கின்றனர். என்னை பொருத்தவரை ஒருவனுடைய வீட்டு மொழியும், சமூகத்தில் உள்ள மொழியும் ஒன்றாக இருந்தால் அவர் தமிழர்தான். இந்த மண்ணை ஆள வேண்டியது தமிழ் தேசியம்தான். அதை தமிழ் தேசியம் மூலம்தான் செல்ல வேண்டுமே தவிர, ஆர்எஸ்எஸ் – பாஜக துணையுடன் செய்யக்கூடாது. சீமானுக்கு மிகவும் பயம். காளியம்மாள் ஏன் இன்று கட்சியில் இல்லை? என் போட்டோவை விட அவர்களது போட்டோவை ஏன்? பெரிதாக போட்டனர் என்று கேட்டவர்தான் சீமான். இதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் அவருடன் பயணித்தோம்.

பெரியார் பல்வேறு நல்ல விஷயங்களை சொல்லியுள்ளார். அவர் அறிவியல் பூர்வமாக யோசித்து சொன்னது, சமுதாயத்தின் மீதான சிந்தனை காரணமாகவே இவற்றை தெரிவித்தார். ஆனால் சீமான் பெரியார் சொல்லாதவற்றை எல்லாம் சொன்னதாக குறிப்பிடுகிறார். அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் வழங்குவேன் என்கிறார். ஆனால் பெரியார் குறித்த அவதூறுகளை நீங்கள் மக்கள் மன்றத்தில் தானே சொன்னீர்கள். அப்போது, அங்கு தானே ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்.  சீமானின் பெரியார் குறித்த அவதூறுக்கு யாரெல்லாம் ஆதரவுக்கு வருகிறார்கள் என்று பாருங்கள். அண்ணாமலை ஆதாரம் தருகிறேன் என்கிறார். ஹெச்.ராஜா என்ன ஆனாலும் துணை நிற்பேன் என்கிறார். குருமூர்த்தி சொல்கிறார், தமிழ்நாட்டில் ஒரு தைரியமான தலைவர் என்று. தமிழிசை, சீமானை தீம் பார்ட்னர் என்று சொல்கிறார். இதனை சீமான் எதிர்த்து பேசுவார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர், ஹெச்.ராஜாவை பேரறிஞர் என்கிறார். பெரியாரையும், ஹெச்.ராஜாவையும் ஒன்றாக வைத்து ஒப்பிடலாமா? பெரியார், தமிழ்நாடு தமிழருக்கே என்று சொன்னாரா? இல்லையா? திருக்குறளை மலம் சொன்னார். பின்னர் திருக்குறள் மாநாடு நடத்தி திருக்குறள்தான் தமிழருடைய நீதிநெறி என்று 1966 வரை விடுதலையில் எழுதினார். பெரியாரின் நீண்ட நெடிய பயணத்தில் முரண்பட்ட கருத்துக்கள் வராமல் இருக்காது. தவறு என்கிறபோது தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.

உண்மையை சொல்வதென்றால், பெரியாரையோ, அம்பேத்கரையோ சீமான் படிக்கவே இல்லை. அவர் போனில் மட்டும்தான் படிப்பார். அறிவுமதி, சுப.வீ, கொளத்தூர் மணி போன்றவர்கள் சொல்லியதை காதால் கேட்டுவிட்டு வந்து பேசுவார். பெரியார் எழுதிய புத்தகங்களையோ, ஆனைமுத்து தொகுத்த புத்தகங்களையோ படித்தது இல்லை. சீமான், சேகுவேரா என்ன சொன்னார், பிடல் கேஸ்ட்ரோ என்ன சொன்னார் என்றுதான் சொல்வார். ஏனென்றால் அவர் அதிகம் படித்ததே வெ.இறையன்புவின் உலக அறிஞர்களின் பொன்மொழிகள் புத்தகம்தான். 15 வருடங்களில் தத்துவார்த்த ரீதியாக கட்சியில் என்ன நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாம் தமிழர் கட்சி சமூக சீர்திருத்த இயக்கமாக இருந்ததா? இல்லை புரட்சிகர இயக்கமாக இருந்ததா? நீங்கள் பிரச்சார இயக்கமாகத் தான் இதனை வைத்துள்ளீர்கள். கட்சியை கட்டமைக்கவில்லை, இருந்த கட்டமைப்புகளையும் கலைத்து விட்டீர்கள். தேர்தலுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்த கட்டமைப்பையே நீங்கள் சிசைத்து விட்டீர்கள். ஒரு தொகுதிக்கு ஒரு செயலாளர் இருந்தார். நீங்கள் ஒரு தொகுதியை 3 ஆக மாற்றினீர்கள். உங்கள் கட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக் குழு வைத்துக்கொள்ள விரும்பாத  நீங்கள், இந்த நாட்டை எப்படி கட்டமைக்கப் போகிறீர்கள்?

எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் -  புகார்

கட்சி சின்னத்தை முடக்க சதி செய்தார்கள் என்று திமுக மீது சீமான் புகார் சொல்கிறார்? ஆனால் திருச்சி சூர்யாவின் செல்போனில் சாட்டை துரைமுருகன் பேசியதில் அவர் தெளிவாக சொல்கிறார். சின்னத்தை முடக்கியதற்கு திமுக காரணம் அல்ல என்று. உண்மையில் நடந்தது என்ன என்றால்?, ராவணன் என்பவர்தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரங்களை கவனித்து வந்தார். அவரை திட்டமிட்டு கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். இது கட்சியின் தலைமைக்கு தெரியாது. அவர் அலுவலகத்திற்கு வராததால், கட்சி சின்னத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க கோரி கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை யாரும் பார்க்கவில்லை. மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் உறுதி செய்யப்பட்டது என்கிற செய்தி வருகிறபோதுதான், இந்த விவகாரமே கட்சியினருக்கு தெரிய வருகிறது. இதனை பாஜக பயன்படுத்திக் கொண்டது. நாங்கள் கட்சியை விட்டு வெளியேறிய ராஜிவ்காந்தி, கல்யாண சுந்தரம் போன்றோருடன் எங்களை தொடர்பு வைக்கக் கூடாது என்று சீமான் சொல்கிறார். ஆனால் தமிழிசை, ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் போன்ற பாஜகவினரோடு சீமான் தொடர்பில் உள்ளார். ரவீந்திரன் துரைசாமியின் நோக்கம் என்பது விஜயை திட்டி, சீமானை புகழ்வதாகும். ரவீந்திரன் துரைசாமி ஆர்எஸ்எஸ் ஆல் பயனடைந்தவர் என்கிறார். அவர் எப்படி தமிழ் தேசியத்திற்கு சரியாக வருவார். நீங்கள் மணியரசன் கூட போங்க, தோழர் தியாகு உடன் போங்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தனியரசு, கருணாஸ் போன்றோர் தொடர்பு வைத்தால், நாங்கள் கேள்வி எழுப்பப் போவது இல்லை. உலகமே சொன்னாலும் பெரியாரை எதிர்ப்பேன் என்கிறார் சீமான். உலகம் சொன்னால் நீங்கள் கேட்காதபோது, உங்களது பேச்சை உலகம் கேட்குமா?

ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரா? பிரபாகரனா? என்று சீமான் கேட்டார். அது எவ்வளவு பெரிய முரண்பாடான கருத்து. நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி  கடுமையான உழைப்பாளி. அவர் உண்மையிலேயே வெல்ல வேண்டும் என எண்ணினேன். இல்லாவிட்டால் கட்டுத் தொகையை வாங்க வேண்டும் என நினைத்தேன். தேர்தலில் அவரது வெற்றி பாதிக்கக்கூடாது என்றுதான் ஊடகங்களை சந்திக்காமல் இதுவரை இருந்து வந்தேன். ஈரோட்டில் உண்மையில் நாதக வேட்பாளர் சீதா லெட்சுமி டெபாசிட் வாங்கியுள்ளார். நீங்கள் யாரை கூட்டி போய் எதிரியாக நிறுத்துகிறீர்கள். பிரபாகரனா? பெரியாரா? என்கிறீர்கள். இப்போது நாம் வென்றிருந்தால் பிரபாகரன் வென்றதாக அர்த்தம். இன்று அவர்கள் பேசுவார்களா?  என்றால் நிச்சயம் பேச மாட்டார்கள். ஏனென்றால் திமுக, அதிமுகவில் பெரும்பான்மையானோர் பிரபாகரனை ஆதரிப்பவர்கள். விசிக, மதிமுக, தவாக முழுமையாக பிரபாகரனை ஆதரிக்கின்றன. ஆனால் பாஜக ஒரு விழுக்காடு பிரபாகரனை ஆதரிப்பார்களா? ஈரோடு இடைத்தேர்தலில் நாம் டெபாசிட்டை வாங்கி இருக்க வேண்டும். பாஜக சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துகிறான். அதற்கு நீங்கள் துணை போகிறீர்கள். அதனால்தான், அரியலூரை சேர்ந்த மண்டல செயலாளர் திமுகவில் இணைந்துள்ளார். அவர் சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சிக்காக நிதி திரட்டியதற்காக கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டவர் ஆவார். அவரை போல பல்வேறு மாவட்டங்களில் உழைத்தவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன். நான் நாதகவில் இருந்து வெளியேறியபோதும், என் மகளுக்கு சீமான் பெரியப்பா தான். துரைமுருகன் எல்லாம் இந்த ஒரு வருஷம் தான் கட்சிக்குள் நுழைந்துள்ளார். இதற்கு முன்னர் அவரை உள்ளேயே விட்டதில்லை. தற்போது கொள்கை ரீதியாக என்னை விமர்சிக்கிறார்கள். இந்த நேர்காணலுக்கு பிறகு பர்சனலாக விமர்சிப்பார்கள். பிரபாகரனை பார்த்து பெரியாரிஸ்ட்டுகள் அச்சப்படுகிறார்களா? பாஜகவினர் அச்சப்படுகிறார்களா? நான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன், இதை செய்வேன் என்கிறார் சீமான். ஆனால் அவர் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செய்வேன் என்று சொன்னாரா? கொரோனா காலகட்டத்தில் கட்சிக்கு என்று சட்ட திட்டங்கள் எழுதி கொண்டுபோய் கொடுத்தோம். ஆனால் இன்று வரை அதை அவர் படிக்கவில்லை. நாதகவில் இதுவரை பொதுக் குழுவை கூட்டி கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளரை, துணை பொதுச்செயலாளர் இவர்தான் என்று அறிவிக்க முடியாதது ஏன்?. கட்சியை கைப்பற்ற பார்க்கிறான் ஜெகதீச பாண்டியன் என சீமான் குற்றம்சாட்டுகிறார். நாம் தமிழர் கட்சி என்ன கைகுட்டையா?, சூட்கேசா? நான் தூக்கிக் கொண்டு செல்வதற்கு, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ