Homeசெய்திகள்கட்டுரைபட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் மகிழ்ச்சி

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் மகிழ்ச்சி

-

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் மகிழ்ச்சி

பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா எப்போது செயல்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் காத்திருந்த இளைஞர்களுக்கு விரைவில் திறக்கப்படலாம் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஆவடி அருகே பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 11.41 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க்  எனப்படும் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மாஃப. பாண்டியராஜன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு 230 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் 5.57 லட்சம் சதுர அடியில் 21 அடுக்கு மாடி கொண்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று தற்போது செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (எல்காட்) நிறுவனமும் இணைந்து உலக தரத்தில்  பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஐ.டி நிறுவனங்கள்  கட்டப்பட்டு சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பழய மகாபலிபுரம் சாலை, புதிய மகாபலிபுரம் சாலை தரமணி மற்றும் கிண்டி அதன் சுற்று வட்டாரங்களில் பல ஐ.டி., நிறுவனங்கள் செயல்பட்டு வருவதினால் பல ஆயிரம்  இளைஞர்கள்  வேலைவாய்ப்பு பெற்று பணி புரிந்து வருகின்றனர்.

அதேபோன்று சென்னை வடமேற்கு பகுதி பட்டாபிராமில் உருவாகியுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா ஸ்டார்ட் – அப்கள் மற்றும்  IT / ITES / BPM  நிறுவனங்கள்  செயல்படுவதற்கு ஏதுவாக இப்பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 5000 முதல் 6000 ஐ.டி தொழில் வல்லுநர்கள், பிற துறை சார்நத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் மகிழ்ச்சி

இப்பூங்காவில் 13வது மாடியில் இருந்து 16வது மாடி வரையில் தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரம் சதுர அடியில் ஃபுட்கோர்ட் எனக்கூறப்படும் அதி நவீன 5 ஸ்டார் தர உணவகம் மற்றும் மின்சாரத் தேவைக்காக சோளர் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.

தொங்கும் தோட்டம் கட்டிடத்தின் தனித்துவமான சிறப்பு கொண்டது. இந்த கட்டமைப்பு IGBC’c பிளாட்டினம் தரமதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடக் கருத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் விதமாக பேருந்து மற்றும் ரயில் வசதிகள் டைடல் பார்க் அருகிலேயே  இருப்பது கூடுதல் சிறப்பு. சுமார் 0.7 கி.மீ தொலைவில் பட்டாபிராம் ரயில் நிலையம், மிக அருகாமையில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

மேலும் சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழில்நுட்ப பூங்காவின் அருகில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை செல்லும் வெளிவட்டச் சாலை (Outer Ring Road), அமைந்துள்ளது. இந்த சாலை வசதியினால் சென்னை, வண்டலூர், தாம்பரம், திருமுடிவாக்கம், குன்றத்தூர், திருமழிசை, நசரத்பேட்டை மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு எளிதான போக்குவரத்து வசதி உள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக சுமார்ட் டைடல் பார்க் பட்டாபிராம்-ல் பயன்பட்டிற்கு வரவிருப்பது பெருமைக்குரியது.

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் T. சடகோபனிடம் பேசும் போது, தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. அதன்படி தொழில்நுட்ப பூங்கா பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை (PATTABIRAM BUS TERMINUS) உடனடியாக சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் பல வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துகள்நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் திருவள்ளூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் LCG-2 க்கும் LCG-3 கேட்டிருக்கும் இடையில் டைடல் பார்க் அருகில் ரயில் நின்று செல்லக்கூடிய நிறுத்தம் (Halt and Go) அமைக்க வேண்டும். அதேபோன்று டைடல் பார்க் பின்புறம் உள்ள ஐஏஎஃப் சாலையை பூங்காவரை நீட்டிக்க வேண்டும். அதுதான் வேலையை முடித்து வெளியே செல்லக்கூடியவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் 6000 பேர் வேலை செய்யக்கூடிய டைடல் பார்க் இருக்கும் இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம்.

பட்டாபிராம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்டர்நெட் கனெக்ட் சுத்தமாக இல்லை. ஏர்டெல், ஜியோ, ACT ஃபைபர்நெட் போன்ற தொலைதொடர்பு கேபிள் அமைக்க வேண்டும். அதனை தொடர்ந்து குடிநீர், பாதாளச்சாக்கடை திட்டம் என்று கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் டைடல் பார்க் உருவான நோக்கம் நிறைவடையும் என்றார்.  

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் மகிழ்ச்சி

 

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் J.ஜெயக்குமாரிடம் பேசிய போது, இவ்வளவு சிறப்பு மிக்க டைடல் பார்க் ஆவடி பட்டாபிராமில் அமைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே முதல் ஸ்மார்ட் டைடல் பார்க் என்ற பெருமையை பெறுகிறது.மேலும் 90% பணிகள் நிறைவுற்ற நிலையில் மீதமுள்ள இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடித்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை விரைவில் ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பட்டாபிராம் டைடல் பார்க்கில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் மகிழ்ச்சி

பின்னர் அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் டாக்டர்.ராய் ரொசாரியா கூறியதாவது, பட்டாபிராம் ஆவடி பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும்,ஆவடி பகுதியில் பிரம்மாண்ட ஸ்மார்ட் டைடல் பார்க் அமைந்ததால் ஆவடி பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையும் . மேலும் திருவள்ளுர் மாவட்டத்தை சார்ந்த ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர்  ஆகிய பகுதியில் வாழும் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்பு கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆகவே அரசு விரைவில் பட்டாபிராம் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என பெரும் ஆவலோடும் எதிர்பார்ப்போடும் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

MUST READ