Homeசெய்திகள்கட்டுரைதிமுகவுக்கு போட்டியா? விடலைப் பையன் விஜய்!  கொதிநிலையில் திருமாவளவன்!

திமுகவுக்கு போட்டியா? விடலைப் பையன் விஜய்!  கொதிநிலையில் திருமாவளவன்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் இடையே போட்டி நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் நடைபெற்ற விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்றைக்கு அரசியலில் விடலைப் பருவத்தில் இருப்பவர்கள் திமுகவை சவாலுக்கு அழைக்கிறார்கள். ஆனால் திமுக களத்தில் தொடர்ந்து விமர்சனங்களை முறியடித்து ஆட்சிக்கு வந்துகொண்டே இருக்கிறது. அந்த கட்சியோடு இன்றைக்கு விசிக கொள்கை புரிதலோடு கைகோர்த்து களமாடுகிறது. இதுதான் இன்றைக்கு பலருக்கு வயிற்றிலே புளி கரைக்கிறது. விசிக எடுத்திருக்கிற உறுதியான கொள்கை நிலைப்பாடு காரணமாகவே இன்றைக்கு தமிழக அரசியலில் திசைவெளி மாறிக் கொண்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை பார்த்ததற்கும் விசிகவின் கொள்கை நிலைப்பாடுதான் காரணம். இன்றைக்கு கட்சி தொடங்கி முதல் பொதுக்குழு நடத்தியிருக்கிற தவெக தலைவர் விஜய், விசிகவை விமர்க்கிறார் என்றால், அதற்கும் விசிக எடுத்துள்ள உறுதிமிக்க கொள்கை நிலைப்பாடுதான் காரணம். அவர்களை தடுமாற வைத்திருப்பது விசிக நிலைப்பாடுதான். எடப்பாடியை அமித்ஷாவை நோக்கி நகர்த்தியது, தவெகவை சார்ந்தவர்கள் விரக்தியால் பேசுவதற்கு காரணமும் விசிக எடுத்துள்ள நிலைப்பாடுதான். சுற்றிவளைத்து பார்த்தால் தமிழக அரசியலின் மையப் புள்ளியாக இன்றைக்கு விசிக தான் உள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

விவாதங்களில் பேசுகிறவர்கள், அதனால் திருமாவளவனுக்கு முக்கியத்துவம் கிடைத்து விடும் என்று இதை பேச மாட்டார்கள். விமர்சிப்பதற்கு என் பெயரை எடுப்பார்கள். திருமா திமுகவுக்கு கொத்தடிமை. 2 சீட்டுகளுக்காக அங்கேயே கிடப்பார்கள். அட மூடர்களே… அற்பர்களே.. உங்களுக்கு களத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்தால், சிறுத்தைகளின் வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களது போராட்டம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த 25 ஆண்டு கால தேர்தல் அரசியலில் விசிக எடுத்திருக்கிற ஒவ்வொரு நிலைப்பாடும், ஒரு கொதி நிலையில் இருந்து எடுத்த நிலைப்பாடு. கடுமையான நெருக்கடிகளில் இருந்து எடுத்த நிலைப்பாடு. ஒரு ஊசலாட்டம் இருந்திருந்தால், கொள்கை தெளிவு இல்லாமல் இருந்திருந்தால் குழப்பத்தோடு இருந்திருந்தால், தன்னலத்தோடு நான் சிந்தித்து இருந்தால்  என்னுடைய முடிவுகள் தவறாக இருந்திருக்கும். என்னால் 25 ஆண்டுகள் தாக்குப்பிடித்து இந்த களத்தில் நின்றிருக்க முடியாது. இவ்வளவு தூரம் பயணித்திருக்க முடியும்.

Aadhav Arjuna - Thirumavalavan

எனக்கு ஒரு சீட்டு கொடுத்தால் போதும், நான் மட்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் போதும். எனக்கு கூடுதலாக இன்னொரு இடம் தேவை இல்லை. உங்கள் அன்பு கிடைத்தால் போதும். உங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறேன்.  என்னை தொடர்ந்து வெற்றி பெற செய்தால் போதும் என்கிற அடிப்படையில் முடிவு நான் எடுத்திருந்தால் இன்றைக்கு விசிக ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க முடியுமா? சில மாதங்களுக்கு முன்பு எவ்வளவு பெரிய நெருக்கடி. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை நம்புகிறவர்களை நான் உயிரை கொடுத்தும் தாங்கி பிடிப்பேன். அவர்களை ஒருபோதும் நான் சந்தேகப்பட மாட்டேன். சூது, சூழ்ச்சி, வஞ்சகம் என்னை சுற்றி சூழ்ந்தாலும் கூட,  என்னோடு இருப்பவர்கள் எனக்கு  எதிராக இந்த வஞ்சகத்தை செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினாலும் கூட எனக்கு இயல்பாக இருக்கும் குணம் நான் நம்பிவிட்டால் அதில் அப்படியே நிற்பேன் அவ்வளவுதான். நான் நம்பினால் அந்த ஒரு கோணத்தில்தான் அவர்களை அணுகுவேனே தவிர இன்னொரு கோணத்தில் அணுக மாட்டேன். அதுதான் எனக்கு இருக்கிற பலமும் பலவீனமும்.

2008ல் வேளச்சேரி மாநாட்டில் தலித் அல்லாதவர்களும் விசிகவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தேன். இன்றைக்கு ஆளுர் ஷாநவாசும், பாலாஜியும் இந்த கட்சியிலே சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் முழங்குகிறார்கள். தேர்தலிலே நிற்காத ஒருவரை தூக்கி கொண்டாடுகிறார்கள். அடுத்து அவர்தான் முதலமைச்சர் என்கிறார்கள். எதோ தனியார் சர்வே நடத்தினார்களாம். 2வது இடத்திற்கு வந்துவிட்டாராம். அடுத்து அவர்தான் ஆட்சியை பிடிக்கப் போகிறாராம். பாவம் அவரை உசுப்பி விடுகிறார்கள் வேண்டும் என்றே. அவருக்கு ஆசையை தூண்டிவிட்டு உள்ளே வந்து களமிறங்கி விளையாடுங்கள். அவர் சொல்கிறார் 2026ல் இரண்டு பேருக்கு தான் போட்டி. ஒரு பக்கம் திமுக மற்றொரு பக்கம் தவெக.  அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்? எடப்பாடி பழனிசாமி அவர்களே நீங்கள் போட்டியில்லை. உங்களை விட நாங்கள் தான் பெரிய சக்தி. போட்டி இப்போது திமுக உடன் கிடையாது. இரண்டாவது இடத்தில் யார் என்பதுதான் விஜய்க்கும் எடப்பாடிக்கும் போட்டி. 2வது இடம் யார் என்பதில்தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் போட்டி. தமிழக அரசியல் களத்தில் 2வது இடத்தை யார் பிடிப்பது?. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும் விஜய்க்கும் சண்டை நடக்கிறது.

திமுக கூட்டணியுடன் அவர்கள் மோத முடியாது. அதை அவர்களே ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார்கள். எங்க ரெண்டு பேருக்கம் இடையில்தான் போட்டி என்று விஜய் யாருக்கு பதில் சொல்கிறார். அது திமுகவுக்கு சொல்கிற பதில் இல்லை. ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கு விடுக்கிற சவால் அது. அதிமுகவுக்கு ஒரு நெருக்கடி தருகிறார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் முதன்மையாகி இருக்கிறது. அதனை எதிர்க்கும் வலு அதிமுகவுக்கு, பாஜகவுக்கு இல்லை. அந்த வலு எங்களுக்குதான் இருக்கிறது என்று இன்னும் வார்டு எலெக்ஷனில் கூட நிற்காத ஒரு கட்சி, 65 எம்எல்ஏக்களை கொண்ட அதிமுகவுக்கு சவால் விடுகிறது. அப்போது அவர்கள் தான் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எங்களுடன் சண்டையிட வில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ