தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இந்திய மனங்கள் பிளவுபடாமல் இருப்பதற்காக அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
உ.பி. முதல்வர் தமிழ்நாட்டின் இருமொழி கொள்கையை விமர்சித்து பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் மும்மொழி கொள்கை எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், எப்போதெல்லாம் அவர்களுக்கு வாக்கு வங்கி பிரச்சினை ஏற்படுகிறதோ, அப்போது பிளவு வாதத்தை பேசுவார்கள் என்று கூறியுள்ளார். வடக்கில் உள்ள யோகி ஆதித்யநாத் போன்ற நபர்களுக்கு தெற்கில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த விதமான அரசியல் கொள்கை இங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரியாது. 1968ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 2 மொழிகள் போதும் என்று அண்ணா முடிவெடுத்தார். அது தீர்க்கமான முடிவு என்பது, இன்றைக்கு எத்தனை மாணவர்கள் ஆங்கிலம் படித்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்பதை பார்க்கும்போது தான் புரிகிறது.
தென் மாநிலங்களில் மட்டும் தான் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டது. உ.பி.யில் இருமொழி கொள்கை கூட இல்லை, ஒரு மொழி கொள்கை தான் உள்ளது. இந்தி மட்டும்தான் உள்ளது. மும்மொழி கொள்கை என்பது 1970களில் இருந்து உள்ளது. அதில் இந்தியை தாய்மொழியாக கொண்டிராத மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் தாய் மொழியையும், ஆங்கிலத்தையும், இந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள், இந்தியையும், ஆங்கிலத்தையும், மற்ற இந்திய மொழி ஒன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இவர்கள் அதை செய்திருக்கிறார்களா?
எதனால் மும்மொழி கொள்கையை இந்த காலகட்டத்தில் பேச வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டிற்கு வந்தது. ஏன் என்றால் ஒன்றுக்கும் உதவாத புதிய தேசிய கல்விக் கொள்கையாகும். அதை நாட்டில் உள்ள அனைவரும் படிக்க வேண்டும் என புகுத்த முயற்சிக்கும்போது தான், இவர்கள் மும்மொழி திட்டம் என்று இந்தியை மறைமுகமாக கொண்டு வருகிறார்கள் என்பதை தமிழ்நாடு உணர்ந்துகொண்டதால் தான் மும்மொழி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் NEP கொண்டுவராமல் இருந்திருந்தால், நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருப்போம். தொடங்கி வைத்தது நீங்கள். அதில் உள்ள தீமையை புரிந்துகொண்டது நாங்கள். அதனால் உடனடியாக குரல் கொடுக்கிறோம்.
இன்றைக்கு உள்ள சட்டத்தின் படி தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால், பல மாநிலங்கள் தங்களுடைய தொகுதிகளை இழக்க நேரிடும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கான இடங்கள் குறைக்கப்படாது என்று சொல்கிறார். ஆனால் 543 தொகுதிகள் அப்படியே இருக்கும் என்று அவர் சொல்லவில்லை. உ.பி.க்கு இன்று 80 ஆக இருப்பது 120 ஆக ஆகுமா? ஆகாதா? பீகாருக்கு கூடுமா? கூடாதா? அதுகுறித்து அமித்ஷா வாய் திறக்க மறுக்கிறார். இன்றைக்கு தென் இந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்தாலும் நாம் குரல் கொடுக்க முடியும். நாடாளுமன்றத்தில் நமக்கு அந்த வலிமைதான் உள்ளது. அந்த வலிமையும் இனிமேல் அடங்கி போய்விடும். ஏனென்றால் பாஜக இன்றைக்கு கூச்சல் போட்டு அடக்குவதுதான் அரசியல் மரபு என்று நினைக்கிற ஒரு தற்குறி கூட்டத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி, மகுவா மொய்த்ரா போன்றவர்கள் பேச எழுந்தால், அவர்களை பேச விடாமல் கூச்சல் போடுவார்கள்.

திமுக எம்.பிக்களை பார்த்து இதுபோன்ற டீசர்ட்டுகள் போட்டுவரக் கூடாது என்கிறார்கள். 39 எம்.பிக்கள் இருக்கும்போதே அமைதியாக எதிர்ப்பை காட்டவே மறுப்பு தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 845 தொகுதிகள் வந்தால், அதில் உ.பி.க்கு 120 போய்விடும். அவர்கள் ஒட்டுமொத்தமாக சத்தம் போட்டால் நாமெல்லாம் எங்கே போய் நிற்போம். தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளக்கூடாது. அரசியலமைப்பு சட்டம் 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது. ஏன் என்றால் நமது சமுதாயம் பன்முகத் தன்மை கொண்டதாகும். இது மாறிக்கொண்டிருக்கிற சமுதாயமாகும். அந்த மாறுதல்களுக்கு தகுந்தார்போல இந்தியாவை இணைக்கும் விதமாக பல சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதேபோல், தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் இந்திய மனங்கள் பிளவுபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டம் திருத்தப்பட வேண்டும். தொகுதி மறுவரையறை சட்டம் இனிமேல் மக்கள் தொகை அடிப்படையிலானது என்பது மாற வேண்டும். அல்லது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போன்று 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டிற்கு உள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவத்தை வழங்கிட வேண்டும்.
நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த திமுக தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த திட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் ஏழைகளை விடவும் கீழ் நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு சம்பளப் பணத்தை கொடுக்காமல் இருப்பது மிகப் பெரிய தவறாகும். இது பொதுமக்களிடம் சென்று சேர வேண்டும். அதனால் முதலமைச்சரின் அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகும். பி.எம் யோஜனா என்கிற பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளது. அந்த திட்டத்திற்கு வெறும் 20 சதவீதம் மட்டும் தான் மத்திய அரசு நிதி வழங்குகிறது. எஞ்சிய தொகையை மாநில அரசும், சம்பந்தப்பட்ட பயனாளியும் தான் தருகிறார்கள். இவர்கள் நமது பணத்தை பயன்படுத்தி அவர்கள் பெயர் எடுக்க பார்க்கிறார்கள். லேபிள் ஒட்டுவதில் பெரிய ஆளாக இருக்கிறார்கள் என்பது மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். அதற்கு தெருமுனை கூட்டங்கள் தான் சரியாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.