Homeசெய்திகள்கட்டுரைஆதவ் அர்ஜூன் விசிகவில் துணை பொதுச் செயலாளரா? தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளரா?

ஆதவ் அர்ஜூன் விசிகவில் துணை பொதுச் செயலாளரா? தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளரா?

-

- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வரும் ஆதவ் அர்ஜூன், கூடுதலாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பணியாற்றி வருகிறாரோ என்கிற சந்தேகம் சமீபத்திய அவருடைய செயல்பாடுகள் காட்டுகிறது.

“அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” என்கிற நூல் வெளியீட்டு விழா நடந்தது. அந்த நூலின் தொகுப்பாசிரியர் ஆதவ் அர்ஜூன், அது ஒரு ஆய்வு நூலா? அல்லது கட்டுரைகளின் தொகுப்பா என்பதை தொகுப்பாசிரியர் என்கிற முறையில் தெளிவு படுத்தி இருக்க வேண்டும். அப்படி நூலைப் பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் பேசாமல் நடப்பு அரசியலைப் பற்றி பேசியிருக்கிறார். அதுவும் திமுக மீது அவருக்கு இருந்த கோபத்தை கொட்டியிருக்கிறார் என்று சொல்லலாம்.

இந்த நூல் வெளியீட்டு அறிவிப்பு வந்தப் பின்னர்தான் அமைச்சர்கள் எல்லாம் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள் என்று பேசியுள்ளார். அதுவும் அம்பேத்கர் தொடர்பான நூலை விஜய் வெளியிடுகிறார் என்றதும் எல்லோரும் அம்பேத்கரை கொண்டாடுகிறார்கள் என்று பேசியுள்ளார். அப்படி என்றால் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக அம்பேத்கரை, அம்பேத்கரின் கொள்கைகளை, அவருடைய பல புத்தகங்களை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்த்த திருமாவளவனின் உழைப்பை அவருடைய கட்சியில் மூன்றாம் கட்ட நிர்வாகியாக இருந்துவரும் ஒருவரே குறைத்து மதிப்பிடுவதை விசிகவின் தொண்டர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள். மேலும் தொல். திருமாவளவனின் உழைப்பை, கொள்கையை, தொலை நோக்கு சிந்தனையை, அவருடைய அறிவாற்றலை படித்தவர்கள் எல்லோரும் போற்றி கொண்டாடி வரும் இந்த காலக்கட்டத்தில், ஆதவ் அர்ஜூன், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், தொல். திருமாவளவனைப் பற்றியும் என்ன நினைக்கிறார் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அம்பேத்கர் என்ற தலைவர் தமிழ்நாட்டிற்கு தெரியும், அதற்கு முன்பு அம்பேத்கர் என்றால் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது என்கிற தோரணையில் ஆதவ் அர்ஜூன் விஜய்யை புகழ்ந்து பேசுகிறார். இதைவிட திருமாவளவனை வேறு எவராலும் சிறுமை படுத்த முடியாது.

எனக்கு தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே என்று 1945ல் மயிலாடுதுறையில் தந்தை பெரியார் பேசி, தமிழர்களுக்கு டாக்டர் அம்பேத்கரை அறிமுகம் செய்திருக்கிறார். இந்தியாவில் முதன்முதலில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி. இப்படி திராவிட இயக்கங்களும், திமுகவும் அம்பேத்கருக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள் என்பதை ஆதவன் அர்ஜூன் போன்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆன்மீகத்தில் காஞ்சிப் பெரியவர் நல்லவர் என்று வர்ணிக்கிறார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சிப் பெரியவர் எப்படி நல்லவரானார்? அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் இந்து மதத்தையும், அதன் வர்ணாசிரம கோட்பாடுகளையும் காலம் முழுவதும் எதிர்த்தவர் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்.

தமிழகத்தில் மன்னர் ஆட்சி முறை இருந்து வருகிறது. 2026ல் அதற்கு முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பேசியுள்ளார். தேர்தலில் நின்று மக்கள் வாக்கு அளித்து வெற்றி பெற்று வந்தப் பின்னர், மன்னர் ஆட்சி என்று எப்படி சொல்கிறார்? திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் ஒப்புதல் இல்லாமல் இப்படி பேச முடியுமா? அல்லது திருமாவளவனின் ஒப்புதலோடு தான் ஆதவன் அர்ஜூன் பேசுகிறாரா? என்கிற சந்தேகம் எழுகிறது.

அதேபோன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும் போது, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார். அதை ஆதவ் அர்ஜூன் ரசித்து கொண்டு அமர்ந்திருக்கிறார்.

தான் சார்ந்து உள்ள ஒரு கட்சியின் தலைவருக்கு சொந்தமாக முடிவெடுக்கும் அளவிற்கு அறிவு இல்லை. திறமை இல்லை என்று இன்னொரு கட்சியின் தலைவர் விஜய் பேசுகிறார், அதை சிரித்து, ரசித்து மகிழ்கிறார். ஆதவன் அர்ஜூனின் நோக்கம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும். அவருடைய செயல்பாட்டை அக்கட்சியின் இன்னொரு துணை பொதுச் செயலாளர் ஆனூர் ஷாவனாஸ், ரவிக்குமார் எம்.பி. போன்ற தலைவர்கள் எல்லோரும் எதிர்க்கிறார்கள்

ஆதவ் அர்ஜூன் என்கிற நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார், தவெக என்கிற விஜய் கட்சிக்கு கொள்கைப் பரப்பு செயலாளராகவும் இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் புரிகிறது. ஆனால் திருமாவளவனுக்கு மட்டும் இன்னும் புரியவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

MUST READ