சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை தான் பிறப்பித்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தின் நோட்டீசுக்கு அவர் பதில் அளித்தவுடன வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வு தொடங்கும் என்றும் பத்திரிகையாளர் செந்தில்வேல் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் சீமானுக்கு எதிராக நடிகை தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்த நிலையில், வழக்கு விசாரணையின் முழுமையான விவரங்களை விளக்கி பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது :- சீமான் மீது, நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ஆம் ஆணடில் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கிறார். பின்னர் அந்த புகாரை திரும்பப் பெறுகிறார். ஆனால் அந்த புகாரின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது. அப்படி எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் புகாரை வாபஸ் பெற்றால் மட்டும் போதாது. அதை நீதிமன்றத்தில் சென்று தள்ளுபடி அல்லது ரத்து ஆக வேண்டும் என்பதுதான் சட்டம். நடிகை புகாரை வாபஸ் பெற்றபோதும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் அண்மையில் சம்பந்தப்பட்ட நடிகை சீமான் மீது குற்றம்சாட்டி மீண்டும் வீடியோக்களை போடுகிறார். தன் மீதான வழக்கு நிலுவையில் இருப்பதால் தான் நடிகை அடிக்கடி இது போன்று செய்கிறார். எனவே வழக்கை ரத்து செய்யக்கோரி நாமே நீதிமன்றத்திற்கு செல்வோம் என சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார். அப்போதுதான் உயர்நீதிமன்ற நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்ய முடியாது, புகார்தாரரே புகாரை திரும்ப பெற்றுக்கொண்டாலும் இந்த வழக்கு நடைபெறும் என்றும் சொல்லிவிட்டார். மேலும் வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சீமான் தாமதமாக ஆஜராகினார். காரணம் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தை அவர் நாடினார். ஆனால் அங்கு தாமதமானதால் வேறு வழியின்றி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது. வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்று இரவு 10 மணிக்கு ஆஜராகி, காவல் துறையினர் கேட்ட கேள்விகளுக்கு 1.15 நேரம் பதில் அளித்தார். எல்லாமே ஆவணமாக பதிவுசெய்யப்பட்டு சீமானிடம் கையெழுத்து பெறப்பட்டது. அடுத்து கையெழுத்து வாங்கியதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து, நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். அப்போது வழக்கில் நடிகை உள்ளிட்ட சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். அதில் சீமான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 6 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், தன்னிடம் நடைபெற்ற விசாரணை அறிக்கையை, காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் பிரச்சினை ஆகிவிடும் என நினைத்த சீமான் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார். அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் யார் என்றால்? நிர்நிமேஷ் துபே. இவர் யார் என்றால் பாஜக ஆதரவாளராக டெல்லி வட்டாரத்தில் அறியப்படுகிறார். பாஜக ஆதரவு பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி, தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அவருக்காக ஆஜராகி வாதாடியவர்தான் இந்த நிர்நிமேஷ் துபே. அவருக்கான கட்டணம் என்பது பெரும் தொகை இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய வழக்கறிஞரை பெரும் தொகை கொடுத்து நியமித்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் இடைக்காலத் தடையை சீமான் பெற்றுள்ளார்.
உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவாக சொல்லி உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு எதிர்மனுதாரரான நடிகைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்கு விஜயலட்சுமி பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலை பெற்றுக்கொண்ட பின்னர் அதன் அடிப்படையில் விசாரித்து உச்சநீதிமன்றம் அடுத்தக்கட்ட உத்தரவை பிறப்பிக்கும். அதுவரை சீமான் மீதான வழக்கை காவல்துறை விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பும் சமாதானமாக போக வாய்ப்பு உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. அப்படி எனில் எதிர் மனுதாரரான நடிகை சமாதானம் ஆக விரும்பவில்லை. வழக்கை தொடர விரும்புகிறேன் என்று உச்சநீதிமன்ற நோட்டீசுக்கு பதில் அளித்தார் என்றால், நீதிமன்றம் இந்த வழக்கை நடத்திதான் ஆக வேண்டும். எனவே வழக்கை விசாரித்து ஆதாரம் இல்லை என்று சீமானை விடுதலை செய்யலாம். அல்லது குற்றவாளி என்று கூறி தண்டனையும் வழங்கலாம். ஆனால் வழக்கையே விசாரிக்காமல் இருக்க முடியாது. எனவே இடைக்காலத் தடை என்பது நடிகையின் கருத்தைக்கேட்டு அடுத்தக்கட்ட நகர்வு வரைக்கும் தான்.
அதற்குள்ளாக சீமான் தரப்புக்கு சமரசம் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்த விவகாரத்தில் நடிகையுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாரா? என்றால் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டதும், சீமான் தரப்பில் இருந்து ஒருவர் புகார் அளித்த நடிகையிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்த ஆடியோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. அதில் பேசும் நபர் தன்னை சீமானின் உறவினர் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். அவர் சீமானிடம் உங்களை பேச வைக்கிறேன். அவர் இரவு 10 மணிக்கு மேல் ஃபிரீயாக இருப்பார். அவர் ஒருவேளை பேசினால், உங்கள் மனதில் உள்ளதை ஓபனாக பேசுங்கள். அவர் கேட்டுக்கொள்வார். நாம சமாதானமாக போகலாம். எதற்கு பிரச்சினை? என்று அந்த நபர் சொல்கிறார். அப்போது நடிகை கேட்கிறார் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டு, செய்தியாளர் சந்திப்பில் கன்னாபின்னா என்று பேசுகிறார் என்று. அதற்கு பதில் அளித்த அந்த நபர், பிரஸ் முன்பு வேறு எப்படி அக்கா பேசுவது என்கிறார்.
அப்படி என்றால் சமாதான பேச்சுவார்த்தையை சீமான் தரப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. தற்போது வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சீமானுக்கு அதற்கான கால அவகாசம் கிடைத்திருக்கிறது. தற்போது பல்வேறு தரப்பில் இருந்து நடிகையிடம் சமாதான பேச்சோ, மிரட்டலோ நடைபெற வாய்ப்பு உள்ளது. இதை தாண்டி அவர் உறுதியாக நின்று, உளப்பூர்வமாக வழக்கை நடத்த தயாராக இருக்கும்பட்சத்தில் தமிழ்நாடு காவல்துறை அவரது பாதுகாப்பை உறுதிசெய்து, இந்த வழக்கை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த வழக்கை அப்படியே எடுத்துச்சென்று விடுவார்கள் என்று சமூக ஊடகங்களில் பலரும் எழுதி வருகின்றனர். அதாவது சீமானை காப்பற்றுவதற்கான முயற்சிகள் நடைபெறக்கூடும் என்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவருக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக அப்படி நடைபெறும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு தூரம் செல்லுமா? என்பது தெரியவில்லை. நான் இந்த வழக்கை முழுமையாக ஆராய்ந்த வகையில், உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது இதுதான். நடிகை தரப்பு வாதத்தை கேட்ட பின்னர் உச்சநீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிடும். அதன் பின்னர் காவல்துறை விசாரணையை தொடங்கலாம். அதனால் இந்த வழக்கில் இருந்து சீமான் தப்பிவிடவும் இல்லை, மாட்டிக்கொள்ளவும் இல்லை. வழக்கு எந்த இடத்திலும் தள்ளுபடி ஆகவில்லை. வழக்கு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.